லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், 193 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி, 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக், போட்டியின் போக்கை இங்கிலாந்துக்கு சாதகமாக மாற்றிய மூன்று முக்கிய தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
பலரும் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை குறை கூறி வரும் நிலையில், தினேஷ் கார்த்திக் போட்டியின் மற்ற முக்கிய தருணங்களில் இந்தியா செய்த தவறுகளே தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட மூன்று முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 376 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அதன்பிறகு, வெறும் 11 ரன்களைச் சேர்ப்பதற்குள் கடைசி நான்கு விக்கெட்டுகளை இழந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தத் திடீர் சரிவு, இங்கிலாந்துக்கு நிகரான ஸ்கோரை மட்டுமே எடுக்க வழிவகுத்தது.
இதுவே இந்தியாவுக்கு ஏற்பட்ட முதல் பின்னடைவு என்று கார்த்திக் கூறி இருக்கிறார். "முதல் இன்னிங்ஸில் 376-6 என்ற ஸ்கோரில் இருந்து 387 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஒரு சரிவு. இது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை வெகுவாக பாதித்தது" என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் போது, விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் வெறும் 5 ரன்களில் இருந்தபோது, கே.எல். ராகுல் ஒரு எளிதான கேட்ச்சை தவறவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஸ்மித், 51 ரன்கள் குவித்து அணிக்கு முக்கிய பங்களிப்பை அளித்தார்.
அவருடன் இணைந்து பிரைடன் கார்ஸ் 56 ரன்கள் எடுக்க, இங்கிலாந்தின் கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். "கே.எல். ராகுல் விட்ட அந்த கேட்ச் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும்," என கார்த்திக் விமர்சித்து இருக்கிறார்.
இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் கட்டுக்கோப்பை இழந்தனர். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 63 ரன்களை உதிரிகளாக வாரி வழங்கினர். குறிப்பாக, இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் 32 ரன்கள் உதிரிகளாக கொடுக்கப்பட்டது. இது ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் எடுத்த ரன்களுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணியின் மூன்றாவது அதிகபட்ச பங்களிப்பாக இருந்தது. இந்த உதிரி ரன்களும் இங்கிலாந்து அணி 192 என்ற சவாலான இலக்கை நிர்ணயிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா கடுமையாக போராடிய போதிலும், இந்த தவறுகளால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை. ஓல்ட் டிராஃபோர்டில் தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு, இந்த தவறுகளை சரிசெய்ய இந்திய அணி நிர்வாகத்திற்கு போதிய அவகாசம் உள்ளது. ஆனால், தொடரில் 2-1 என பின்தங்கியுள்ளதால், இனி தவறு செய்ய வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம்.