பிர்மிங்காம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் புதன்கிழமை அன்று முடிவடைந்த நிலையில், சுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியபோது, இங்கிலாந்து வீரர்கள் ரவீந்திர ஜடேஜாவை சீண்டி, அவரை ஆட்டமிழக்கச் செய்ய முயன்றனர். ஆனால், அவர்களது திட்டம் நிறைவேறவில்லை. என்ன நடந்தது என்று விரிவாகப் பார்க்கலாம்.

இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கிய அன்று வெயில் சற்று அதிகமாக இருந்தது. இந்தியாவில் நிலவும் வெப்பத்தின் அளவுக்கு இல்லை என்றாலும், இங்கிலாந்தில் அது சற்று அதிகமான வெப்பமாகவே இருந்தது. இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா போட்டி துவங்கிய 15வது நிமிடத்திலேயே தண்ணீர் வேண்டுமென இந்திய முகாமுக்கு சைகை செய்தார்.
பின்னர் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ரவீந்திர ஜடேஜா தண்ணீர் வாங்கி அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே வந்த இங்கிலாந்து வீரர்கள், "இந்த நாளின் ஆட்டம் ஆரம்பித்து 15 நிமிடங்கள் தான் ஆகிறது. அதற்குள் உங்களுக்கு தண்ணீர் வேண்டுமா?" என்று அவரை சீண்டினர்.
இதன் மூலம் ஜடேஜா கோபப்பட்டு, அடுத்து பவுண்டரிகளை அடிக்க நினைத்து ஆட்டமிழப்பார் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்கவில்லை. ரவீந்திர ஜடேஜா மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரும் நிதானமாக ஆடினர்.
ரவீந்திர ஜடேஜா அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார். இங்கிலாந்து வீரர்களின் திட்டம் நிறைவேறவில்லை. ரவீந்திர ஜடேஜா 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அபாரமாக ஆடிய சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார். பின்னர் 250 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்து சாதனை படைத்தார். இந்திய அணி விரைவாகவே 550 ரன்களைத் தாண்டியது. இது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
இங்கிலாந்து வீரர்களின் இதுபோன்ற செயல்கள் கிரிக்கெட்டில் சகஜமாக இருந்தாலும், ஜடேஜாவின் அமைதியான மற்றும் பொறுப்பான ஆட்டம், களத்தில் நிதானத்தின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.