ஐதராபாத் : இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ள இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லி, 100 ரன்களுக்கும் மேலாக விட்டுக் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஐதராபாத் மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியின் 3 ஸ்பின்னர்களும் விக்கெட் வேட்டையாடினார்கள்.

இந்த பிட்ச் இங்கிலாந்து அணி வீரர்கள் நினைத்ததை போல் அதிகளவு ஸ்பின்னாகவில்லை என்று பார்க்கப்பட்டது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 119 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து களத்தில் களத்தில் இருந்தது. இதையடுத்து 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறி வருகின்றனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களிலும், சுப்மன் கில் 23 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் விராட் கோலியின் இடத்தில் களமிறங்கிய கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 86 ரன்களை விளாசினார். இதையடுத்து களமிறங்கியுள்ள ஜடேஜா இங்கிலாந்து பவுலர்களுக்கு கூடுதல் தொல்லை கொடுத்து வருகிறார். ஏற்கனவே இந்திய அணியின் முன்னிலை 100 ரன்களை கடந்துள்ள நிலையில், இங்கிலாந்து பவுலர்கள் இப்போதும் கூட சரியான லைன் மற்றும் லெந்த் எதுவென்று புரியாமல் திணறி வருகின்றனர்.
அதிலும் இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல் ரன்களை எளிதாக வாரி வழங்கி வருகிறார். இவர் பவுலிங் செய்யும் போது இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக பவுண்டரி விளாசி வருகின்றனர். 24 ஓவர்களை வீசியுள்ள டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 116 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே 100 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்த இங்கிலாந்து பவுலர்களின் பட்டியலில் ஹார்ட்லி இணைந்துள்ளார்.