ராஜ்கோட் : இங்கிலாந்து அணியின் இளம் ஸ்பின்னரான ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனை காரணமாக ராஜ்கோட் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் இரு அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்திய அணி வீரர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு மீண்டும் ராஜ்கோட் வந்துள்ளனர்.

அதேபோல் இங்கிலாந்து அணியினர் இங்கிலாந்து பயணித்தால் ஓய்வு இருக்காது என்பதை முடிவு செய்து, அபுதாபி பயணித்தனர். அங்கு இங்கிலாந்து வீரர்களின் குடும்பத்தினர் அவர்களுடன் இணைந்து கொண்டனர். இந்த நிலையில் 3வது டெஸ்டில் விளையாடுவதற்காக நேற்று அபுதாபியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ராஜ்கோட் புறப்பட்டது.
ராஜ்கோட் விமான நிலையத்தை எட்டிய பின், இங்கிலாந்து அணியின் ரெஹான் அஹ்மத் மட்டும் விசா பிரச்சனையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், அவருக்கு கடந்த ஒன் டைம் விசா வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்தியாவில் இருந்து வெளியேறியதால், அவர் மீண்டும் விசா பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவர் ராஜ்கோட் வந்திறங்கிய நிலையில், விமான நிலைய அதிகாரிகள் குறுகிய கால தீர்வாக 2 நாட்கள் எமர்ஜென்சி விசா ரெஹான் அஹ்மத்திற்கு வழங்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட இந்திய அணி நிர்வாகம், விசா பிரச்சனையை 24 மணி நேரத்திற்குள் தீர்ப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக இங்கிலாந்து அணி வீரர்கள் விமான நிலையத்திலேயே இருந்துள்ளனர்.
ஏற்கனவே இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சோயப் பஷீர் விசா பிரச்சனை காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. 3 நாட்கள் தாமதமாக இந்திய வந்த அவர் 2வது டெஸ்ட் போட்டியில் நேரடியாக அறிமுகம் செய்யப்பட்டார். தற்போது ரெஹான் அஹ்மத் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளதால், இங்கிலாந்து வீரர்களில் சிலர் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.