IND vs ENG: திலக் வர்மாவை தவறாகப் பயன்படுத்தும் கம்பீர் - ஸ்ரேயாஸ் கூட்டணி.. ரசிகர்கள் அதிருப்தி
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணியின் இடதுகை பேட்டர் திலக் வர்மாவை அணி நிர்வாகம் தவறான பேட்டிங் வரிசையில் களம் இறக்கி சொதப்பியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணியின் இந்தத் தவறான உத்தி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில், 9-வது ஓவரில் 5-வது வீரராக திலக் வர்மா களம் இறக்கப்பட்டார். அப்போது இங்கிலாந்து அணி அடில் ரஷித், லியாம் டாசன், வில் ஜாக்ஸ் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியது. சுழற்பந்துக்கு எதிராகத் தடுமாறும் திலக் வர்மா, சுழற்பந்து வீச்சில் 8 பந்துகளைச் சந்தித்து 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒட்டுமொத்தமாக 13 பந்துகளில் 13 ரன்களுடன் அவர் வெளியேறினார். ஆனால், அவருக்குப் பின் களம் இறங்கிய சிவம் துபே சுழற்பந்து வீச்சில் 12 பந்துகளில் 25 ரன்கள் விளாசி, ஒட்டுமொத்தமாக 21 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அசத்தினார்.

புள்ளிவிவரங்களின்படி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திலக் வர்மா தொடர்ந்து தடுமாறி வருகிறார். கடந்த 2025 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 266 பந்துகளைச் சந்தித்து 300 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 112.78 மட்டுமே ஆகும். ஐபிஎல் தொடரிலும் சுழற்பந்துக்கு எதிராக இவரது ஸ்ட்ரைக் ரேட் 115.50 ஆக மட்டுமே உள்ளது.
டி20 போட்டிகளில் 7 முதல் 15 ஓவர்கள் வரையிலான மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களே அதிகம் பந்துவீசுவர். அப்படிப்பட்ட சூழலில் சுழற்பந்துக்கு எதிராகத் தடுமாறும் திலக் வர்மாவை 5-வது வரிசையில் களம் இறக்குவது தவறான உத்தியாகும்.
சுழற்பந்தை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் சிவம் துபே அல்லது அக்சர் படேல் ஆகியோரை மிடில் ஓவர்களில் களம் இறக்காமல், வேகப்பந்து வீச்சை நன்றாக எதிர்கொள்ளும் திலக் வர்மாவை அந்த இடத்தில் களம் இறக்கியது அணியின் சமநிலையைப் பாதித்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே எதிர்கொள்ளக்கூடிய அக்சர் படேலை 7 அல்லது 8-வது வரிசையில் களம் இறக்குவது அவரது திறமையை வீணடிக்கும் செயல் என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையால் முடிவின்றி பாதியில் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை முழுமையாக முடித்து இருந்தது. அதில் 189 ரன்கள் குவித்து இருந்தது. பேட்டிங் வரிசையை சரியாக கையாண்டு இருந்தால் 200 ரன்களுக்கும் மேல் எடுத்திருக்கக் கூடும். அதே சமயம், திலக் வர்மா சுழற்பந்து வீச்சு பலவீனத்தை வைத்துக் கொண்டு நீண்ட நாள் இந்திய அணியில் நிலைக்க முடியாது. விரைவில் அவர் அந்த பலவீனத்தை சரி செய்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications
