விசாகப்பட்டினம் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தை ஜியோ சினிமா செயலியில் 33.3 கோடி பார்வையாளர்கள் நேரலையில் பார்ப்பதாக காட்டப்பட்டது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் ரெஹான் அஹ்மத் - ஜாக் கிராலி இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் இங்கிலாந்து அணியின் ரெஹான் அஹ்மத் 23 ரன்களில் அக்சர் படேல் பந்திலும், இளம் வீரர் ஓல்லி போப் 23 ரன்களிலும், ஜோ ரூட் 16 ரன்களிலும் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 154 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
ஜாக் கிராலி அரைசதம் கடந்து அதிரடியாக ரன்கள் குவித்து வரும் நிலையில், மறுபக்கம் பேர்ஸ்டோவ் களத்தில் இருக்கிறார். இதனால் ஆட்டம் நிச்சயம் 4வது நாளுடன் முடியும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திங்கட் கிழமையான இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கிய 9.30 மணிக்கெல்லாம் ஜியோ சினிமா செயலியில் 33.3 கோடி பேர் போட்டியை பார்ப்பதாக நேரலையில் காட்டப்பட்டது.
இது ரசிகர்கள் மத்தியில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மக்கள் ஓய்வில் இருக்க வாய்ப்புகள் உள்ளதால், அன்றைய நாளில் கிரிக்கெட் பார்க்கலாம். ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்று காலையிலேயே ஜியோ சினிமாவில் 33.3 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்ப்பதாக சொல்து பொய் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்திய அணி விளையாடிய உலகக்கோப்பை போட்டியை செல்போன் செயலியில் பார்த்ததை விடவும் தொலைக்காட்சியில் பார்த்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இதனால் ஜியோ சினிமா நிறுவனம் தொலைக்காட்சி எண்ணிக்கையையும் சேர்த்து கூறுகிறதா என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.