91 ஆண்டுகளில் முதல்முறை.. உச்சத்தில் இந்திய அணி.. சுப்மன் கில், ஜடேஜா, ராகுல் இணைந்து படைத்த சாதனை!
லண்டன்: 91 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 3 வீரர்கள் ஒரே டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் விளாசிய புதிய வரலாறு படைத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், தொடக்க வீரர் கேஎல் ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் 500 ரன்களுக்கு மேல் விளாசி அசத்தி இருக்கின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 374 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அதிலும் முக்கியமான நேரத்தில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விக்கெட்டை கொடுக்காமல் சிறப்பாக ஆடினார். 77 பந்துகளில் 53 ரன்களை விளாசிய ஜடேஜா, புதிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக 10 இன்னிங்ஸிலும் 5 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 516 ரன்களை விளாசி இருக்கிறார். ஒரு டெஸ்ட் தொடரில் ஜடேஜா 500 ரன்களுக்கு மேல் விளாசுவது இதுவே முதல்முறையாகும்.
அதேபோல் 4வது டெஸ்ட் போட்டியின் போது கேஎல் ராகுலும் 500 ரன்களை கடந்தார். இந்த டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 10 இன்னிங்ஸில் 754 ரன்களையும், கேஎல் ராகுல் 10 இன்னிங்ஸில் ஆடி 532 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 10 இன்னிங்ஸில் ஆடி 516 ரன்களையும் விளாசி இருக்கின்றனர். 91 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் 3 பேட்ஸ்மேன்கள் ஒரே டெஸ்ட் தொடரில் 500 ரன்களை விளாசுவது இதுவே முதல்முறையாகும்.
அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் 7 இன்னிங்ஸில் விளையாடி 479 ரன்களை விளாசி இருக்கிறார். தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலும் 10 இன்னிங்ஸில் 411 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலமாக 400 ரன்களுக்கு மேல் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் குவித்து சாதித்துள்ளனர். கடைசியாக 1989 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணியின் 5 வீரர்கள் 400 ரன்களுக்கு மேல் குவித்தனர்.
அதன்பின் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் 5 பேட்ஸ்மேன்கள் 400 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல்முறை. இதனால் இந்த டெஸ்ட் தொடரில் நம்பர் 3ல் ஆடிய சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் ஆகியோரை தவிர்த்து மற்ற அனைவருமே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications