நாடி நரம்பெல்லாம் சிக்ஸ் வெறி.. அம்பானி முதல் 24 வயது வீரருக்காக மொத்த மைதானமே எழுந்து நின்ற தருணம்
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி துவக்க வீரர் அபிஷேக் சர்மா 13 சிக்ஸ் அடித்து சதம் அடித்து இருந்தார். அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது முகேஷ் அம்பானி, ரசிகர்கள் என அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். இந்த காட்சி பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.
அவர் இந்த போட்டியில் 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து இருந்தார். 13 சிக்ஸ் மற்றும் 7 ஃபோர் அடித்து இருந்தார். இதன் மூலம் அவர் பல்வேறு டி20 சாதனைகளை படைத்திருந்தார். அவர் 18 வது ஓவரின் முடிவில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அப்போது இந்த போட்டி நடந்த மும்பை வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்.

இந்த போட்டியை காண வந்திருந்த முகேஷ் அம்பானி முதல் ஆளாக எழுந்து நின்று கைதட்டி அபிஷேக் சர்மாவை பாராட்டினார். 24 வயது ஆகும் அபிஷேக் சர்மாவுக்காக மொத்த மைதானமும் எழுந்து நின்ற காட்சி கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த காட்சி தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. ஒருபுறம் விக்கெட்கள் சரிந்த போதும் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். அவர் 17 பந்துகளில் அரை சதம் கடந்திருந்தார். 37 பந்துகளில் சதம் அடித்து இருந்தார்.
இதன் மூலம் உலக அளவில் டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் மற்றும் மூன்றாவது அதிவேக சதம் ஆகிய இரண்டு முக்கிய சாதனைகளை படைத்தார். மேலும் டி20 போட்டியின் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரர், இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஸ்கோரை அடித்த வீரர் என பல்வேறு சாதனைகளை படைத்தார்.
அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 247 ரன்களை குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications