லண்டன்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், முற்றிலும் பெரிய அனுபவம் இல்லாத வீரர்கள் தான் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
கே எல் ராகுல், கில், ரிஷப் பண்ட் ஆகியோர்களை நம்பி தான் இந்திய அணியின் பேட்டிங் இருக்கிறது. ஜெய்ஸ்வால் அனுபவ வீரர் கருண் நாயர் ஆகியோர் தங்களுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த சூழலில் இந்திய அணியை வழிநடத்தும் பயிற்சியாளர்கள் அனுபவம் வாய்ந்தவராக இருப்பார்கள். குறிப்பாக வெளிநாட்டு மண்களில் விளையாடி அதிக ரன்களை அடித்த வீரர்களாக இருப்பார்கள். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி போன்ற வீரர்கள் எல்லாம் வெளிநாட்டு மண்களில் நன்றாக விளையாடிய திறனை கொண்டவர்கள்.
இந்த தருணத்தில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும், கம்பீர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல ரெகார்டை வைத்திருந்தாலும் அது அனைத்தும் இந்திய மண்ணில் அடிக்கப்பட்டவை.
58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 4154 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒன்பது சதம், 22 அரை சதம் அடங்கும். இந்த நிலையில் கம்பீர் இங்கிலாந்து மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார். இதில் மொத்தமாக அவர் அடித்த ரன்கள் 127 தான் என்பது இங்கு கவனிக்க வேண்டியது.
இதில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 38 ரன்கள் ஆகும். சராசரி வெறும் 12 என்ற அளவிலே இருக்கிறது. இதனால் கம்பீர் இங்கிலாந்தில் பெரிய அளவு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிகிறது. இதேபோன்று ஆஸ்திரேலிய மண்ணிலும் கம்பீர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 181 ரன்கள் தான் அடித்து இருந்தார்.
இதில் ஒரு அரை சதம் அடங்கும். கம்பீர் பயிற்சியாளராக இருந்தபோது ஆஸ்திரேலியாவில் இந்திய அணி அடி வாங்கிய நிலையில் தற்போது இங்கிலாந்தில் அவரை நம்பி இந்திய வீரர்கள் செல்கிறார்கள். இதனால் இங்கிலாந்து மண்ணிலும் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவ அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் பேட்டிங் நுணுக்கங்கள் தெரிந்த ஒரு பயிற்சியாளர் இங்கிலாந்து தொடரில் இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.