
போட்டி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகளும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள்
இத்தொடரின் முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கும் 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள போட்டிகளுக்கும் டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மீதமுள்ள டி20 போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அம்மாநில கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேண்டுகோள்
இதுகுறித்து பேசியுள்ள அதிகாரி ஒருவர், ரசிகர்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகளுக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும். அதே போல் அன்பளிப்பாக டிக்கெட் பெறப்பட்டவர்கள் போட்டியை காண வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கும்?
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியும் ரசிகர்கள் இன்றி சென்னையில் நடைபெற்றது. ஆனால் முடிவில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் 3வது டி20யில் இது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல் வரவிருக்கும் ஐபிஎல் போட்டியும் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications