பிர்மிங்காம்: இந்திய கிரிக்கெட் அணி எப்போதுமே ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திற்கு ஒவ்வொரு தலைமைப் பொறுப்பை ஆதரிக்காத அணிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், இந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, சூர்யகுமார் யாதவ் T20I போட்டிகளுக்கு கேப்டனாகவும், ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளுக்கும், சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2024 T20 உலகக் கோப்பை வரை, ரோஹித் ஷர்மா மூன்று விதமான போட்டி வடிவங்களுக்கும் கேப்டனாக இருந்தார்.இந்நிலையில், முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், டெஸ்ட் மற்றும் ஒருநாள் டி20 போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் முறையை இந்திய அணி பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர், ஹர்பஜனின் முன்னாள் அணி வீரராவார். வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு வீரர்கள் விளையாடுவதால், சிவப்பு பந்து (red-ball) மற்றும் வெள்ளை பந்து (white-ball) போட்டிகளுக்கு தனித்தனி பயிற்சியாளர்கள் இருப்பது பணிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என்றும், ஹர்பஜன் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "இந்த முறையை செயல்படுத்த முடிந்தால், அதில் எந்தத் தவறும் இல்லை. வெவ்வேறு வடிவங்களுக்கு வெவ்வேறு அணிகளும் வீரர்களும் உள்ளனர். இதைச் செய்ய முடிந்தால், இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது அனைவருக்கும் பணிச்சுமையைக் குறைக்கும், பயிற்சியாளர்களையும் உள்ளடக்கி. எனவே, இது நடக்குமானால், அது மோசமான விருப்பமல்ல," என்று ஹர்பஜன் தெரிவித்தார்.
"ஒரு பயிற்சியாளருக்கு ஒரு தொடருக்கு தயாராக நேரம் தேவை. உதாரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள், பின்னர் இங்கிலாந்தில், பிறகு வேறு இடங்களில். எனவே, பயிற்சியாளர் தனது அணியைத் தயார்படுத்துவதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். வெள்ளை பந்து பயிற்சியாளருக்கும் இதே நேரம் தேவை," என்று ஹர்பஜன் மேலும் கூறினார்.
"ஒரு பயிற்சியாளரை ஆண்டு முழுவதும் அதிகமாக வேலை செய்ய வைத்தால், அவருக்கும் குடும்பமும் பொறுப்புகளும் உள்ளன. குடும்பத்துடன் தொடர்ந்து பயணிப்பது எளிதல்ல. எனவே, என் கருத்துப்படி, சிவப்பு பந்து மற்றும் வெள்ளை பந்து பயிற்சியைப் பிரிப்பது ஒரு நல்ல முடிவாகும்," என்று ஹர்பஜன் கூறினார்.தற்போது ஹர்பஜன் சிங் பிர்மிங்காமில் உள்ளார், அங்கு அவர் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்கவுள்ளார்.