ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு என்ன காரணம் என்பது குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவும் பேசி இருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். "நான் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது பனிப்பொழிவு இருக்கும்.இதன் மூலம் பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை".

"ஹர்திக் பாண்டியாவும், அக்சர் பட்டேலும் களத்தில் இருந்த போது, எங்களுக்கு 24 பந்துகளுக்கு 55 ரன்கள் தான் தேவைப்பட்டது. இதனால் போட்டி எங்கள் கைக்குள் தான் இருந்தது என்று நான் நினைத்தேன்.ஆனால் ஆதில் ரசித் அபாரமாக பந்து வீசினார். நாங்கள் சிங்கிள்ஸ் அதிகம் எடுக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் எங்களை ரன் ஓட விடாமல் அவர் தடுத்தார்".
"இதனால்தான் ஆதில் ரசித் உலகத்தரம் வாய்ந்த பவுலராக இருக்கின்றார். எதிரணியை ரன்கள் எடுக்க விடக்கூடாது என்பதற்காகத்தான் எங்கள் அணியில் பல சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். டி20 போட்டிகளில் இருந்து எப்போதுமே நாம் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். பேட்டிங்கில் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பது குறித்து பாடம் கற்க வேண்டும்".
"இந்த போட்டியில் நாங்கள் எந்த விஷயத்தில் கோட்டை விட்டோம் என்பது குறித்து அனைவரும் ஒருங்கிணைந்து கண்டுபிடித்து அதிலிருந்து நிச்சயம் பாடம் கற்போம். 127 ரன்களுக்கு 8 விக்கெட்டை எடுத்துவிட்டு, 170 ரன்கள் மேல் அடிக்கவிட்டது மிகவும் தவறு. முகமது சமி பந்து வீசிய விதம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. வருண் சக்கரவர்த்தி எங்கள் அணியில் மிகவும் உழைக்கும் வீரராக இருக்கின்றார். அவர் நல்ல முறையில் பந்து வீசி வருகிறார்".
"வருணின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக தான் நான் இதை பார்க்கின்றேன்" என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். சூரியகுமார் யாதவ், பேட்டிங்கில் கடந்த ஐந்து இன்னிங்ஸ்களாக 15 ரன்கள் கூட தொடாத நிலையில் ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் ஆகியோரை மறைமுகமாக குறை கூறியிருப்பது ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது.