லண்டன்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு பென் ஸ்டோக்சின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தான் காரணம் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என்ற மூன்று பிரிவிலும் ஸ்டோக்ஸ் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.
குறிப்பாக ஸ்டோக்ஸ் ஐந்தாவது நாள் ஆட்டத்தின் போது தொடர்ந்து ஒன்பது புள்ளி இரண்டு ஓவர்களை வீசியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட், இந்திய அணி வீரர்கள் ஜாக் கிராலியிடம் மோதலில் ஈடுபட்டது ஸ்டோக்சை கோபப்படுத்தி இருந்ததால்தான் அவர் தொடர்ந்து ஓவர்கள் வீசி இருபார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "மூன்றாவது நாள் கடைசி நாளில் பும்ரா ஓவரை இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி எதிர்கொண்டபோது இந்திய வீரர்கள் அவரை குறி வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது நிச்சயம் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் சூடு ஏத்தி இருக்கும்."
"அந்த ஓவர் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை கொடுத்திருக்கும். பார்க்கவே அது அவ்வளவு சிறப்பாக இருந்தது. எனினும் ஸ்டோக்ஸ்க்கு அது நிச்சயம் பிடித்து இருக்காது. ஏனென்றால் தன்னுடைய ஒரு வீரரை எதிரணி வீரர்கள் திட்டும்போது யாரும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். இங்கிலாந்து அணி வீரர்கள் எதிரணியிடம் கடைசியாக எப்போது இவ்வாறு வாய் பேசி மோதலில் ஈடுபட்டார்கள் என்று எனக்கு ஞாபகம் இல்லை."
"குறிப்பாக நிதீஷ் குமார் ரெட்டிக்கு ஆர்ச்சர் ஒரு பவுன்சர் வீசினார். அந்த பந்தை நிதிஷ்குமார் எதிர்கொண்ட போது ஒவ்வொரு இங்கிலாந்து வீரர்களும் நிதிஷ்குமாரை சுற்றி அவரை ஸ்லெட்ஜ் செய்தார்கள். இதன்மூலம் நிதிஷ்குமாருக்கு கடும் நெருக்கடியில் ஏற்படுத்தினார்கள். அதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையாக மாறி இருக்கும்."
"ஸ்டோக்ஸ் பந்து வீசுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து தனது வீரர்களிடம் இந்தியா தற்போது நெருக்கடியில் இருக்கின்றது. அவர்களை அடித்து ஆட வையுங்கள் என்று கூறினார். இதன் மூலம் மனரீதியாக ஒரு போரை பென் ஸ்டோக்ஸ் உருவாக்கினார். இது இந்தியா அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்தது. ஸ்டோக்ஸ் பின்னால் ஒட்டுமொத்த அணியும் ஒருங்கிணைந்து இருந்தார்கள்" என்று பிராட் பாராட்டினார்.