மான்செஸ்டர்: லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு நெருக்கமாக சென்று தோல்வியடைந்த இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. அடுத்து இந்த தொடரின் நான்காவது போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் உயிர்ப்புடன் இருக்க, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
ஆனால், வரலாற்றைப் பார்த்தால், மான்செஸ்டர் மைதானம் இந்திய அணிக்கு ராசியானதாக இருந்ததில்லை. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஓல்ட் டிராஃபோர்டில் ஒன்பது முறை மோதியுள்ளன, ஆனால் இந்திய அணி ஒரு வெற்றி கூட பெறவில்லை. இதில் இங்கிலாந்து நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது, ஐந்து போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

இது, பேட்டிங் செய்வதற்கு எவ்வளவு கடினமான ஒரு களம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இங்கு ரன்கள் எடுப்பது கடினம், சதம் அடிப்பது அதனினும் கடினம். ஆனாலும் கூட மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்டில் சதம் அடித்துச் சாதித்த இந்திய வீரர்கள் சிலர் உள்ளனர். ஆனால், கடந்த 35 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய வீரர் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் சையத் முஷ்டாக் அலி தான், 1936-ஆம் ஆண்டில் மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அந்தப் போட்டியில் அவர் 112 ரன்கள் குவித்தார். இது இந்திய டெஸ்ட் வரலாற்றில், வெளிநாட்டு மண்ணில் அடிக்கப்பட்ட முதல் சதம் ஆகும்.
மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்டில் இதுவரை எட்டு இந்திய வீரர்கள் மட்டுமே சதம் அடித்துள்ளனர். முஷ்டாக் அலி முதல் வீரராக இந்தச் சாதனையைச் செய்ய, அவரைத் தொடர்ந்து விஜய் மெர்ச்சன்ட், அப்பாஸ் அலி பெய்க், பாலி உம்ரிகர், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாட்டில், முகமது அசாருதீன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
| வீரர் | ரன்கள் | ஆண்டு |
| சையத் முஷ்டாக் அலி | 112 | 1936 |
| விஜய் மெர்ச்சன்ட் | 114 | 1936 |
| அப்பாஸ் அலி பெய்க் | 112 | 1959 |
| பாலி உம்ரிகர் | 118 | 1959 |
| சுனில் கவாஸ்கர் | 101 | 1974 |
| சந்தீப் பாட்டில் | 129 | 1982 |
| முகமது அசாருதீன் | 179 | 1990 |
| சச்சின் டெண்டுல்கர் | 119* | 1990 |
ஓல்ட் டிராஃபோர்டில் இந்திய வீரர் ஒருவர் சதம் அடித்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசியாக சச்சின் டெண்டுல்கர் 1990-ல் அடித்த சதமே, அவரது முதல் டெஸ்ட் சதமாகும். மேலும், ஓல்ட் டிராஃபோர்டில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையை முகமது அசாருதீன் (179 ரன்கள்) தன்வசம் வைத்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, இந்த இளம் அணியிடம் இருந்து பெரிய அளவில் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, சுப்மன் கில் தலைமையிலான அணி இங்கிலாந்துக்கு தங்கள் சொந்த மண்ணிலேயே கடுமையான சவாலை அளித்துள்ளது.
ஆனால், தோல்வி அடைந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி நெருக்கமாகவே தோற்று இருந்தது. இந்திய அணி வெளிப்படுத்திய அபாரமான ஆட்டம் வீணாகிப் போயுள்ளது. தற்போது நான்காவது டெஸ்ட் நடைபெற உள்ள மைதானமும் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை.
லீட்ஸில் உள்ள ஹெடிங்லியைப் போலவே, ஓல்ட் டிராஃபோர்டும் அதன் உண்மையான தன்மையை போட்டி முழுவதும் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு மைதானமாகும். இங்குள்ள பசுமையான ஆடுகளங்கள் (green tops) ஆசிய அணிகளுக்கு பெரும் சவாலாக அமைகின்றன. பந்தின் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் தன்மைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதற்குள், இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து விடுவதால், இந்த மைதானம் அவர்களுக்கு கடினமாகவே இருந்து வருகிறது.
மறுபுறம், ஓல்ட் டிராஃபோர்ட் இங்கிலாந்தின் விருப்பமான மைதானங்களில் ஒன்றாகும். இங்கு விளையாடிய 84 டெஸ்ட் போட்டிகளில், இங்கிலாந்து அணி 33 போட்டிகளில் வெற்றி பெற்று, 15-ல் தோல்வியும், 36 போட்டிகளை டிராவும் செய்துள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் இந்த மைதானத்தில் மோதும்போது, தனது ஆதிக்கத்தைத் தொடர இங்கிலாந்து முயற்சிக்கும். ஆனால், தொடரை 2-2 என சமன் செய்ய, இந்த இளம் இந்திய அணி தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.