லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கின்றது. லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாசினர். இதனால் இந்திய அணி முதலில் 471 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறிங்கிய இங்கிலாந்து அணியும் அதிரடியாக பதிலடி தந்தது.

சிறப்பாக விளையாடிய ஆலி போப் சதம் அடித்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணி 209 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோர் உடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆலி போப் 106 ரன்களில் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய ஹாரி புரூக் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு 99 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஜோ ரூட் 28 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஸ்டோக்ஸ் 20 ரன்களில் வெளியேறினார். ஜெமி ஸ்மித் 40 ரன்களில் ஆட்டம் இழக்க, அதிரடியாக விளையாடிய கிறிஸ் வொக்ஸ் 38 ரன்களும் பிரைடன் கர்ஸ் 22 ரன்களும் எடுத்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 465 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா,இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆசிய வீரர் என்ற வசீம் அக்ரமின் சாதனையை பும்ரா முறியடித்தார்.
அது மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு வெளியே அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய கபில் தேவின் சாதனையை பும்ரா முறியடித்திருக்கிறார். பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளையும் சிராஜ் இரண்டு விக்கெட் களையும் கைப்பற்றினர். இதனை அடுத்து ஆறு ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினர். முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆனார். சாய் சுதர்சன் இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 48 பந்துகளில் அவர் 30 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.
சாய் சுதர்சன் நிலையான இன்னிங்சை ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் முப்பது ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் தொடக்க வீரர் ராகுல் அபாரமாக ரன் குவித்து வந்தார். 7 பவுண்டரிகளை அடித்த ராகுல் 75 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். மறுபுறம் கேப்டன் சுப்மன் கில் 6 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் களத்தில் இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு மூன்றாவது நாள் முடிவுக்கு வந்தது.
தற்போது இரண்டு நாள் எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணி இங்கிலாந்தை விட 96 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ராகுல், சுப்மன் கில் மற்றும் கருண் நாயர், ரிஷப் பண்ட் ஆகியோர் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும். இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். இதன் மூலம் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.