கெண்ட்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அது மட்டுமில்லாமல் கேஎல் ராகுல், சர்துல் தாக்கூர்,ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் இந்தியா ஏ அணியில் இடம் பெற்று பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கினார்கள். இந்த சூழலில் இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் இன்று முதல் கென்ட் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த பயிற்சி ஆட்டம் 360 ஓவர்கள் கொண்ட match stimulation என்ற முறைப்படி நடைபெறும். அதாவது போட்டியில் உள்ள நெருக்கடி சூழலை போல் உருவாக்கி அதன்பின் வீரர்கள் விளையாடுவார்கள். அதாவது இன்னும் 60 ரன்கள் எடுத்தால் ஃபாலோ ஆனை தவிர்க்கலாம் என்பது போல் ஒரு பொய்யான சூழ்நிலை உருவாக்கி விட்டு வீரர்களை விளையாட வைப்பார்கள்.
இதேபோன்று இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்று பந்துவீச்சு அணிக்கும் ஒரு டாஸ்க் வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் ஒரே வீரர் இரண்டு முறையும் பேட்டிங் செய்யலாம். ஒரு வீரர் ஆட்டம் இழந்தாலும் மீண்டும் நான் விளையாடுகிறேன் என முடிவெடுத்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.மொத்தம் நடைபெறும் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் 360 ஓவர்கள் வீச திட்டமிடப்பட்டு இருக்கிறது.
எனினும் இந்த போட்டி எந்த சேனலிலும் ஆன்லைனிலும் ஒளிபரப்பு செய்யப்பட மாட்டாது. ஏனென்றால் இந்திய அணி எவ்வாறு பயிற்சி செய்கிறது யார் எப்படி விளையாடுகிறார்கள் என்பது எதிர் அணிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஏற்கனவே ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி பயிற்சி செய்தபோது வெளி ஆட்கள் மற்றும் ரசிகர்கள் என யாருக்குமே அனுமதி அளிக்கப்படவில்லை.
பெரிய திரை போடப்பட்டு, அதற்குள் இந்திய வீரர்கள் பயிற்சி செய்தனர். தற்போது அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரசிகர்கள், மீடியா என யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. இதன் மூலம் ரகசியமாக இந்திய அணி வீரர்கள் பயிற்சியை செய்ய கம்பீர் முடிவு எடுத்திருக்கிறார். கில், பும்ரா, சாய் சுதர்சன், பண்ட் ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ராகுல் போன்ற வீரர்கள் இந்த பயிற்சி ஆட்டத்தில் முக்கிய பங்கு பெறுவார்கள்.