IND vs ENG: 6 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த இந்தியா.. 224 ரன்களுக்கு ஆல் அவுட்.. அட்கின்சன் அபாரம்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருக்கின்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தொடரை இந்தியா சமன் செய்ய வேண்டும் என்றால் கடைசி டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். இந்த சூழ்நிலையில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் இரண்டு ரன்களிலும், ராகுல் 14 ரன்களிலும், கில் 21 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஜடேஜா ஒன்பது ரன்களில் வெளியேற சாய் சுதர்ஷன் 38 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜூரல் 19 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் விக்கெட்டுக்குள் சரிந்தாலும் மறுமுனையின் அபாரமாக விளையாடிய கருண் நாயர் அரை சதம் அடித்தார்.
இந்த நிலையில் இந்திய அணி 204 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 52 ரன்கள் உடன் கருண் நாயரும், 19 ரன்கள் உடன் வாஷிங்டன் சுந்தரும் இன்றைய நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்தியா குறைந்தபட்சம் 300 ரன்கள் கடந்து விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கருண் நாயர் கூடுதலாக இன்று வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் 57 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதைப் போன்று கடந்த போட்டியின் சதம் அடித்த வாஷிங்டன் சுந்தர் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் பின் களம் இறங்கிய முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஒரே ஓவரில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 69.4 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 224 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர் அட்கின்சன் ஐந்து விக்கெட்டுகளையும், ஜோஸ் டாங்க் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கின்றனர். இதை அடுத்து இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.


Click it and Unblock the Notifications