41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி.. டென்ஷனான கம்பீர்.. வெற்றி வாய்ப்பு பறிபோனதா?
லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 471 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லீட்ஸ் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 42 ரன்களில் ஆட்டம் இழக்க அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். இதே போன்று டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டனாக களம் இறங்கிய சுப்மன் கில் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினார்.

இந்த சூழலில் இந்திய அணி 359 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது. கில் 127 ரன்களும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் இரண்டாவது நாள் ஆட்டத்தை அபாரமாக விளையாடினார். பண்ட் தன்னுடைய ஏழாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை அவர் முறியடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் டக் அவுட் ஆக சர்துல் தாக்கூர் ஒரு ரன்னில் வெளியேறினார். ஜடேஜா 11 ரன்களும், பும்ரா டக் அவுட் ஆகியும், பிரசித் கிருஷ்ணா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி 471 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு கட்டத்தில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்து இந்த நிலையில் கில் ஆட்டம் இழந்தவுடன் இந்திய அணியின் சரிவு தொடங்கியது. மேலும் 41 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்தது.ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருந்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதனை பயன்படுத்திக் கொண்டு இங்கிலாந்து வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதில் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்த சூழலில் தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இங்கிலாந்து அணியின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த இந்திய பவுலர்களுக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தொடக்க வீரர் ஜாக் கிராலி நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி நான்கு ரன்கள் முதல் விக்கெட்டை இழந்தது.


Click it and Unblock the Notifications