பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 7 விக்கெட்டுகள் கடைசி நாளில் தேவைப்படுகிறது. அதே சமயம் இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி நாளில் 536 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவது என்பது முடியாத காரியமாக இருக்கின்றது.
இதன் மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஒன்று இந்தியா வெற்றி பெறும்.இல்லையென்றால் போட்டி சமனில் முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தால் 587 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 407 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. 64 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் நான்காவது நாள் ஆட்டத்தை இந்தியா தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார்.
இதேபோன்று கருண் நாயர் 26 ரன்களில் வெளியேற ரிஷப் பந்த் 65 ரன்கள் சேர்த்து 8 பவுண்டரி மூன்று சிக்சர்களை விளாசி பெவிலியனுக்கு சென்றார். முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த கில், இரண்டாவது இன்னிங்சிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 13 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.
தொடர்ந்து பௌண்டரி, சிக்சர் என விரட்டிய அவர் 162 பந்துகளில் 161 ரன்கள் சேர்தார். இதில் 13 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம், இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன் மேல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்த சூழலில் ஜடேஜா இறுதி கட்டத்தில் 69 ரன்கள் சேர்க்க இந்திய அணி 427 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஒரே போட்டியில், இரு இன்னிங்சிலும் சேர்த்து ஆயிரம் ரன்களுக்கு(1014 ரன்கள்) மேல் அடித்தது இதுவே முதல் முறையாகும். இந்த சூழலில் 608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
நான்காவது நாள் ஆட்டம் முடிய சில ஓவர்கள் இருந்ததால் அதை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க இந்திய வீரர்கள் போராடினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாக் கிராலி சிராஜின் பந்துவீச்சில் டக் ஆனார். இதேபோன்று ஆகாஷ் தீப் அசுர வேகத்தில் பந்து வீசி முதல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றியை பறித்த பென் டக்கச் விக்கெட்டை 25 ரன்களில் வீழ்த்தினார்.
இதேபோன்று இங்கிலாந்து அணியின் நட்சத்திர அனுபவ வீரரான ஜோ ரூட்டை 6 ரன்கள் எடுத்திருந்தபோது ஆகாஷ் தீப் ஒரு மேஜிக் பந்தால் ஸ்டெம்புகள் சிதற ஆட்டம் இழக்க வைத்தார். இதன் மூலம் நான்காவது நாள் ஆட்டநேரம் முடிவில் இங்கிலாந்து அணி 16 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருக்கின்றார்.
இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 536 ரன்களும் இந்தியாவின் வெற்றிக்கு ஏழு விக்கெட்டுகளும் தேவைப்படுகிறது. நாளை மழை பாதிப்பு இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இதன இந்திய அணி விரைவில் 7 விக்கெட்டுகளை வீழ்த்துமா இல்லை இங்கிலாந்து அணி போட்டியை சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.