பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 608 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனையை படைக்க வேண்டும். இதன் மூலம் இந்த டெஸ்ட் போட்டியில் ஒன்று இந்தியா அணி வெற்றி பெறும்.
இல்லை என்றால் போட்டி டிராவாகும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் விளாச 587 ரன்களை இந்தியா குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 407 ரன்களில் ஆட்டம் இழந்தது.

இதனை அடுத்து 150 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது. 64 ரன்கள் ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதம் எடுக்க கருண் நாயர் 26 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதேபோன்று ரிஷப் பன்ட் அதிரடியாக விளையாடி 8 பவுண்டரி, மூன்று சிக்சர் என 58 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். ஆனால் மறுமுனையில் கில் மீண்டும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடுவது போல் ரன்களை சேர்த்த அவர் பவுண்டரி, சிக்சர் என விரட்டினார்.
இதன் மூலம் இந்தியாவின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் கில் 13 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஒரே டெஸ்டில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதன்பின் கில் டி 20 மோடுக்கு சென்று சிக்சர் பவுண்டரி என பறக்க விட்டார். ஒரு கட்டத்தில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 161 ரன்களில் அவர் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ஜடேஜா 69 ரன்கள் எடுக்க இந்திய அணி 427 ரண்களுக்கு ஆறு விக்கெட் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து மணிக்கு 608 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 418 ரன்கள் வெற்றிகரமாக எட்டப்பட்டிருக்கிறது. இதனால் இந்த இலக்கை இங்கிலாந்து அணி எட்டினால் அது மிகப்பெரிய உலக சாதனையாக மாறும்.
கில்லை பொறுத்த வரை ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலும் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் 148 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் 250 ரன்கள், 150 ரன்கள் அடித்த ஒரே வீரர் உள்ளிட்ட பெருமைகளை கில் படைத்திருக்கின்றார்.