ஸ்கூல் பசங்களை அடிச்சது போதும் தம்பிகளா.. டிக்ளேர் செய்த ரோகித் சர்மா.. இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு
ராஜ்கோட் : இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 557 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 600 ரன்கள் என்றாலும் அசராமல் 60 ஓவர்களில் சேஸ் செய்வோம் என்று கூறியிருந்தார். அவர் கேட்டதற்கு ஏற்ப இந்திய அணி தரப்பில் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 557 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

3வது நாள் ஆட்டத்தை 196/2 என்ற நிலையில் சுப்மன் கில் - குல்தீப் யாதவ் கூட்டணி தொடங்கியது. இதில் சுப்மன் கில் 91 ரன்களிலும், குல்தீப் யாதவ் 27 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் - சர்பராஸ் கான் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் இங்கிலாந்து அணியின் பவுலர்களுக்கு கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல் வெளுத்து கட்டினார்கள்.
ஒரு கட்டத்தில் அதிரடிக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை போல் இங்கிலாந்து அணி வீரர்களின் ரியாக்ஷன் இருந்தது. ஏனென்றால் 185 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்திலேயே ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார் ஜெய்ஸ்வால். பேஸ்பால் ஆட்டத்தை ஆடுகிறோம் என்று பெருமையாக சொல்லி வந்த இங்கிலாந்து, ஜெய்ஸ்-பால் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது.
ஒரு பக்கம் ஜெய்ஸ்வால் என்றால் இன்னொரு பக்கம் சர்பராஸ் கான் சைலண்ட் மோடில் பவுண்டரிகளாக விளாசினார். சிறப்பாக ஆடிய அவர் அரைசதம் கடக்க, இன்னொரு பக்கம் இரட்டை சதம் விளாசி அசத்தினார் ஜெய்ஸ்வால். இதன்மூலமாக இந்திய அணியின் ஸ்கோர் 430 ரன்களாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் 126 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து 556 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
இதன் காரணமாக இந்திய அணி தரப்பில் 557 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 236 பந்துகளில் 12 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 214 ரன்களை விளாசினார். அதேபோல் சர்பராஸ் கான் 72 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 68 ரன்களை விளாசினார். 4வது நாள் ஆட்டத்தில் 41 ஓவர்கள் மீதமிருக்கும் சூழலில் இந்திய அணி பவுலிங்கை தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications