IND vs ENG: தோல்வியை நோக்கி இந்திய அணி? ரன் குவிப்பில் இங்கிலாந்து.. விக்கெட் எடுக்க கில் படை திணறல்
லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்தது. 6 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது இதில் ரிஷப் பண்ட், கே எல் ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.

ஒரு கட்டத்தில் கீழ் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி 364 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தங்களுடைய கடைசி இன்னிங்ஸில் விளையாடியது. விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து களமிறங்கியது.
கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மேலும் 350 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்கு 10 விக்கெட் தேவைப்படுகிறது. இந்த சூழலில் இந்திய அணி புதிய பந்தை பயன்படுத்தி ஆரம்ப கட்டத்தில் விக்கெட்டுகள் எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பும்ரா, சிராஜ் ஆகியோர் எவ்வளவு முயற்சி செய்தும் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை.
பும்ரா ஒன்பது ஓவர் முடிவில் 21 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். சிராஜ் எட்டு ஓவர் முடிவில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். இருவரும் சேர்ந்து மூன்று மைடன்களை வீசியிருந்தனர். இது போன்று ஜடேஜா நான்கு ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். எனினும் பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோர் அதிக ரன்களை வாரி வழங்கினர்.
ஆறு ஓவர் முடிவில் பிரசித் கிருஷ்ணா 38 ரன்களையும் மூன்று ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்தனர். தற்போது 30 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 254 ரன்கள் தேவைப்படுகிறது. இன்னும் 66 ஓவர்கள் எஞ்சி இருக்கிறது. இதனால் ஒரு ஓவருக்கு நான்கு ரன்கள் என அடித்தால் கூட இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டிவிடும். இதனால் இந்தியாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications