அகமதாபாத்: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணிக்காக ஆடிய சதம் விளாசிய கேஎஸ் பரத், கடவுள் ராமருக்கு அர்ப்பணித்து கொண்டாடியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 553 ரன்களை குவித்தது.

அதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ரஜத் பட்டிதார் மட்டும் சிறப்பாக ஆடி 151 ரன்களை சேர்த்தார். தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணி வெற்றிபெற 490 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன்பின் நடைபெற்ற கடைசி 4 நாள் ஆட்டத்தில் சாய் சுதர்சன் 208 பந்துகளில் 97 ரன்களும், மனவ் சுதர் 254 பந்துகளில் 89 ரன்களும், கேஎஸ் பரத் 165 பந்துகளில் 116 ரன்களும் சேர்த்தனர். மனர் சுதர் மற்றும் கேஎஸ் பரத் இணைந்து 207 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய ஏ அணியின் மானம் காத்தனர். இதனால் 4வது நாள் ஆட்ட முடிவில் இந்திய ஏ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 426 ரன்கள் குவித்தது.
இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியில் சதம் விளாசிய கேஎஸ் பரத், தனது பேட்டிங் திறமையும், ஃபார்மையும் இந்திய அணி நிர்வாகத்திற்கு நிரூபித்துள்ளார். ஏனென்றால் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ள கேஎஸ் பரத், பேக் அப் வீரராகவே பார்க்கப்பட்டு வந்தார். தற்போது ஃபார்முக்கு வந்துள்ளதால், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சதம் விளாசிய கேஎஸ் பரத், அந்த சதத்தை கடவுள் ராமருக்கு அர்ப்பணிப்பதாக செய்கை காட்டியுள்ளார். சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஹெல்மெட் மற்றும் பேட்டை உயர்த்திய காட்டி கொண்டாடிய அவர், பின் வில்லில் அம்பை விடுவதை போல் செய்து காட்டினார். அயோத்தியில் நாளை ராமர் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில், கேஎஸ் பரத் அடித்த சதத்தை ராமருக்கு அர்ப்பணித்து கொண்டாடிய வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.