சென்னை : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி ரன்களை சேர்த்தனர். 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது t20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் ஐந்து சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

கொல்கத்தா ஆடுகளத்தை விட சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்கள் ரன்களை கசிய விட்டனர். இதனை அடுத்து சூரியகுமார் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து தாக்குதல் நடத்தினார். தொடக்க வீரர் பில் சால்ட் 4 ரன்களில் ஆர்ஸ்தீப் ஓவரில் ஆட்டம் இழக்க, பெண் டக்கட் வாஷிங்டன் சுந்தர் ஓவரில் பெவிலியன் திரும்பினார்.
இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹாரி புருக், ஜாஸ் பட்லர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த சூழலில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என எட்டு பந்துகளில் 13 ரன்கள் சேர்த்து அபாயகரமான வீரராக திகழ்ந்தார். ஆனால் வருண் சக்கரவர்த்தி அவரை போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார்.
இதேபோன்று கேப்டன் ஜாஸ் பட்லர் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் அடங்கும். அப்போது அக்சர் பட்டேல் பந்து வீச்சில் பட்லர் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிவிங்ஸ்டோன் 13 ரன்களிலும், அறிமுக வீரரான ஜெமி ஸ்மித் 22 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.
இந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் பிரைடன் கர்ஸ் மட்டும் அபாரமாக விளையாடி 17 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். அவர் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி என அடித்து இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். களத்தில் நின்று இங்கிலாந்துக்கு பெரிய இலக்கை கர்ஸ் தருவார் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பிய நிலையில் ஒரு சிறு தவறு காரணமாக ரன் அவுட் ஆனார். இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 12 ரன்கள், மார்க் வுட் ஐந்து ரன்களும் எடுக்க இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் ரவி பிஸ்னாய் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.