ஐதராபாத் : டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் ஆட்டமிழந்திருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் 7 சதங்கள், 10 அரைசதங்கள் என்று மொத்தமாக 2,154 ரன்களை விளாசினார். அதேபோல் ஐபிஎல் தொடரில் மட்டும் 2 சதங்கள் உட்பட 890 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் ரசிகர்களிடையே இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக சுப்மன் கில் இருப்பார் என்று பேச்சுகள் எழுந்தன. பலரும் விராட் கோலிக்கு பின் அவரது இடத்தை சுப்மன் கில் பிடிப்பார் என்று பாராட்டினர்.

இதனால் சுப்மன் கில்லை பலரும் "பிரின்ஸ்" என்று அழைத்து வந்தனர். ஆனால் சுப்மன் கில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இருந்தார். அதன்பின் சுப்மன் கில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாக சேர்த்து சுப்மன் கில் 119 ரன்கள் மட்டுமே சேர்த்தார். டெஸ்ட் கிரிக்கெட் அச்சாணியாக இருக்கும் நம்பர் 3 வரிசையில் களமிறங்கி வரும் சுப்மன் கில், அதற்கேற்ப செயல்படவில்லை என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சுப்மன் கில்லுக்கு முன் ஆடிய புஜாரா சராசரியாக ஒரே இன்னிங்ஸிற்கு 92.14 பந்துகளையும், ராகுல் டிராவிட் சராசரியாக 109.29 பந்துகளையும் எதிர் கொண்டுள்ளனர்.
ஆனால் சுப்மன் கில் சராசரியாக ஒரு இன்னிங்ஸிற்கு 47.4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டுள்ளார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் 3 வரிசையில் களமிறங்குவதற்கு சுப்மன் கில் சரியான வீரரில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் சொந்த மண்ணில் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்து அறிமுக வீரரின் பந்தில் வெளியேறியுள்ளார் சுப்மன் மில்.
இதன் மூலம் கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரு முறை கூட அரைசதம் அடிக்க முடியாமல் சுப்மன் கில் திணறி வருகிறார். ஏற்கனவே இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதற்காக ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் பட்டிதர், சர்ஃபராஸ் கான் உள்ளிட்டோர் காத்திருக்கும் நிலையில், சுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களிடையே கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே சென்றால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலேயே சுப்மன் கில் பெஞ்ச் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.