விசாகப்பட்டினம் : கடந்த 7 ஆண்டுகளில் இந்திய வீரர்களின் பேட்டிங் தரம் சொந்த மண்ணில் குறைந்து வருவதாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சாடியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 சிக்ஸ், 19 ஃபோர்ஸ் உட்பட 209 ரன்களை விளாசினார். மற்ற இந்திய வீரர்களில் ஒருவரை கூட 35 ரன்களை கூட சேர்க்கவில்லை. இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

குறிப்பாக சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரஜத் பட்டிதர் உள்ளிட்டோருக்கு மிகச்சிறந்த தொடக்கம் கிடைத்தும் அவர்கள் மோசமாக ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்தனர். அதேபோல் கேஎஸ் பரத் சொந்த மண்ணில் களமிறங்கியும் மோசமாக ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். யஷஷ்வி ஜெய்ஸ்வால் அடித்த ரன்களை கழித்துவிட்டு மற்ற இந்திய வீரர்களின் ஸ்கோரை பார்த்தால் வெறும் 187 ரன்களாக மட்டுமே உள்ளது.
இந்திய அணியின் மோசமான பேட்டிங்கிற்கு தரமற்ற பிட்ச்களே காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், பும்ரா, ஷமி, சிராஜ் மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்டோர் பந்துவீசுவதை பார்க்கும் போது, எதற்காக இந்தியாவில் ஸ்பின்னுக்கு சாதகமாக பிட்ச்களை தயார் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

இதன் காரணமாகவே சிறந்த பிட்ச்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்ற எனது எண்ணத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது. அஸ்வின், ஜடேஜா, அக்சர், குல்தீப் யாதவ் ஆகியோரின் உதவியால் எந்த பிட்சிலும் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்ற முடியும். ஆனால் சொந்த மண்ணில் இந்திய வீரர்களின் பேட்டிங் தரம் கடந்த 7 ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது.
இதனால் சிறந்த பிட்ச்களின் தேவை அவசியமாகிறது. 5 நாட்கள் போட்டிகள் நடந்தாலும் இந்திய அணியால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்று பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகள் நடத்துவதற்கு என்று பிரத்யேக பிட்ச் மற்றும் மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல் இந்தியாவிலும் டெஸ்ட் பிட்ச் மற்றும் மைதானங்கள் பிரத்யேகமாக ஒதுக்கப்பட வேண்டும் என்பது கங்குலியின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.