தரம்சாலா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ரஜத் பட்டிதர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரான தேவ்தத் படிக்கல் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடக்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பதால் இந்திய அணி அதிகப்படியான டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய தேவை உள்ளது. இதனால் 5வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.

இதனால் 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தரம்சாலா மைதானம் ஓரளவிற்கு வேகப்பந்துவீச்சிற்கு சாதகம் என்பதால், இங்கிலாந்து அணி கடைசி போட்டியில் வென்று பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாடிய ரஜத் பட்டிதரை நீக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரஜத் பட்டிதர் இருமுறை டக் அவுட்டாகியதோடு மொத்தமாகவே 63 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுல் 5வது டெஸ்ட் போட்டிக்கு திரும்புவதற்கு வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. லண்டனில் இருந்தாலும் பரிசோதனைக்காக மட்டுமே கேஎல் ராகுல் லண்டன் சென்றுள்ளார். இதனால் மார்ச் 2ஆம் தேதி கேஎல் ராகுல் விளையாடுவாரா என்பது தெரிய வரும். இதனால் அதுவரை ரஜத் பட்டிதரை இந்திய அணி இருக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக ரஜத் பட்டிதரை விளையாட வைக்க இந்திய அணி முடிவு செய்திருந்தது. தற்போது கேஎல் ராகுல் பரிசோதனை முடிவுகள் வர தாமதமானதால், ரஜத் பட்டிதர் இந்திய அணியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 5வது டெஸ்டில் கேஎல் ராகுல் விலகினால், அவருக்கான இடத்தை ரஜத் பட்டிதர் நிரப்ப வேண்டும். ரஜத் பட்டிதருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் விளையாடினாலும், கன்கஷன் வீரராக பேட்ஸ்மேன் இருப்பது அவசியமாக கருதுவதால், ரஜத் பட்டிதர் இந்திய அணியில் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.