சென்னை: முகமது ஷமி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் டி20 போட்டியில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்ற போதும், முகமது ஷமிக்கு பயிற்சி அளிக்கும் வகையில் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என விமர்சகர்களும், ரசிகர்களும் சுட்டிக் காட்டி இருந்தனர்.
தற்போது முகமது ஷமிக்கு இடம் கிடைக்காமல் போனதற்கு காரணமே ஹர்திக் பாண்டியா தான் என ஒரு தகவல் கூறப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறாமல் இருந்த முகமது ஷமி காயத்திலிருந்து மீண்டு அணியில் இடம் பிடித்திருந்தார்.

அடுத்து அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இருக்கிறார். அந்த தொடருக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஷமியை ஆட வைத்து அவருக்கு பயிற்சி அளிக்கவும், அவரது உடற்திறனை பரிசோதிக்கவும் முடிவு செய்த தேர்வு குழு அவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் சேர்த்தது.
அதன்படி அவர் இங்கிலாந்து அணிக்கு ஏத்தினா முதல் டி20 போட்டியில் விளையாடுவதற்காக தீவிரமாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். வலை பயிற்சியின் மூன்றாவது நாள் அன்று அவர் அதிக வேகத்தில் பந்து வீசி இருந்தார். எனவே, அவர் முதல் போட்டியின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது உறுதி என கருதப்பட்டது.
ஆனால், ஹர்திக் பாண்டியா பகுதி நேர வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும் தான் ஓபனிங்கில் பந்து வீச தயாராக இருப்பதாக இந்திய அணி நிர்வாகத்திற்கு தெரிவித்து இருக்கிறார். அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும் என திட்டமிட்டு இருந்த பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு, ஹர்திக் பாண்டியாவின் இந்த வார்த்தைகள் உறுதுணையாக இருந்தது.
எனவே, அவர் ஒரே ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங்கை மட்டும் அணியில் சேர்த்துவிட்டு இரண்டு பகுதி நேர பந்து வீச்சாளர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் குமாரை அணியில் சேர்த்து அவர்களுடன் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களையும் பிளேயிங் லெவனில் ஆட வைத்தார்.
அதனால் தான் முகமது ஷமிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. நிதிஷ் குமாரால் புதிய பந்தில் பவுலிங் வீச முடியாது. ஹர்திக் பாண்டியாவும் பொதுவாக புதிய பந்தில் பவுலிங் வீச மாட்டார். ஆனால், இந்த முறை அவர் புதிய பந்தில் பவுலிங் வீச தயாராக இருப்பதாக கூறியதால் தான் முகமது ஷமிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை என தெரிகிறது.
ஏற்கனவே, 2023 ஐபிஎல் தொடரில் முகமது ஷமிக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டன. அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, முகமது ஷமியை ஆடுகளத்தில் திட்டியதாக ஒரு சர்ச்சை எழுந்து இருந்தது. அதன் பின் இந்திய அணியில் முகமது ஷமிக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையிலும் கூட ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகிய பின்னரே, முகமது ஷமி அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார் என்பது நினைவு இருக்கலாம்.