மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாளில் 264 ரன்களுக்கு நான்கு விக்கெட் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இருக்கும்.

இதன் காரணமாக இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் இருந்தனர். இந்த தருணத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர்.
ராகுல் 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ஜெய்ஸ்வால் 58 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்த சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில், 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழதார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 142 ரன்கள் 3 விக்கெட் இழந்து தடுமாறிய போது, பண்ட் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீண்டும் சரிவிலிருந்து மீட்டது.
அபாரமாக விளையாடிய சாய் சுதர்சன் 151 பந்துகளை எதிர் கொண்டு 61 ரன்கள் எடுத்தார். 37 ரன்கள் எடுத்து பண்ட்,அபாரமாக விளையாடி வந்த நிலையில் பந்து ஒன்று அவருடைய காலை தாக்கியது. இதில் அவர் காயம் அடைந்து எழுந்து நிற்கவே முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து மினி ஆம்புலன்ஸ் மூலம் அவர் மைதானத்தை விட்டு அழைத்து செல்லப்பட்டார்.
இதனால் மீண்டும் பண்ட் களத்துக்கு வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை. இந்த தருணத்தில் ஜடேஜாவும் சர்துல் தாக்கூரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வந்தனர். ஒரு கட்டத்தில் வானம் மேலும் இருட்டியதால் பந்தே கண்களுக்கு தெரியவில்லை என ஜடேஜா நடுவரிடம் புகார் அளித்தார். இதனை அடுத்து சுழற் பந்துவீச்சாளர்கள் இருமுனையிலும் வீசத் தொடங்கினர்.
ஆனால் அதன் பின்பும் பந்து கண்களுக்கு தெரியாத அளவுக்கு இருட்டானதால் போட்டியை நடுவர்கள் முன்கூட்டியே நிறுத்திக் கொண்டனர். இதனால் முதல் நாள் முடிவில் 83 ஓவர்கள் தான் வீசப்பட்டது. இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்திருக்கிறது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.