பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 427 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ஆனால், ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடியதால் தான் இந்திய அணி சற்று முன்னதாகவே டிக்ளேர் செய்ய முடியாமல் போய்விட்டது என்றும், நான்காவது நாளின் முடிவில் 16 ஓவர்கள் மீதம் இருக்கும்போதே டிக்ளேர் செய்திருந்தால், இங்கிலாந்து அணியை கூடுதல் நேரம் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆட வைத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கலாம் எனவும் ரசிகர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், நியாயமே இல்லாமல் ரவீந்திர ஜடேஜாவை இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் 69 ரன்கள் சேர்த்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 58 என்பதாக இருந்தது. டெஸ்ட் போட்டிக்கு இது ஒரு நல்ல ஸ்ட்ரைக் ரேட் தான்.

ஆனால், அவர் இன்னும் விரைவாக ஆடுகிறேன் என்று தனது விக்கெட்டை இழந்து இருந்தால், இந்திய அணியால் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயம் செய்திருக்க முடியாது. இந்த இடத்தில் தான் ஜடேஜாவை தவறாக விமர்சித்து வருகிறார்கள். ஏன் ஜடேஜா ஆடிய நிதான ஆட்டம் மிகவும் முக்கியமானது என்பது பற்றி பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயம் செய்ய இந்திய அணி முடிவெடுத்தது.
ஏனெனில், முதல் போட்டியில் இந்திய அணி 371 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்தும், அதை இங்கிலாந்து அணி எட்டி இருந்தது. எனவே, நிச்சயம் 500 ரன்களுக்கும் மேற்பட்ட பெரிய இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்திய அணி திட்டமிட்டது.
எனவே, நான்காவது நாள் ஆட்டத்தில் விக்கெட் இழக்காமல் விரைவாக ரன் சேர்க்க வேண்டிய அவசியம் இருந்தது. கே.எல். ராகுல் நிதானமாக ஆடி 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம் ஆடினார்கள். ரிஷப் பண்ட் 58 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு ரவீந்திர ஜடேஜா கேப்டன் சுப்மன் கில்லுடன் இணைந்து பேட்டிங் செய்தார். சுப்மன் கில் ஒருபுறம் அதிரடியாக ஆடியபோது, ரவீந்திர ஜடேஜா மறுபுறம் நிதானமாக ஆடி வந்தார். சுப்மன் கில் 162 பந்துகளில் 161 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்து இருந்தார்.
இந்திய அணி 427 ரன்களை எடுத்தபோது டிக்ளேர் செய்தது. ஏன் இந்த நேரத்தில் டிக்ளேர் செய்தது என்றால், அப்போது இந்திய அணி 600 ரன்கள் முன்னிலையை பெற்றுவிட்டது. அதனால் தான் 600 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்துவிட்டோம் என்ற முடிவில் தான் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
ரவீந்திர ஜடேஜா 118 பந்துகளில் 69 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் ரவீந்திர ஜடேஜா விரைவாக ரன் சேர்த்திருந்தால், இந்திய அணி எப்போதோ 600 ரன்கள் முன்னிலையை எட்டி டிக்ளேர் செய்திருக்க முடியும் என்ற வாதத்தை சில ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.
ஆனால், ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்துக்கு வரும்போது இந்திய அணி 236 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அப்போது ஜடேஜா விரைவாக ஆடுவதாக நினைத்து தனது விக்கெட்டை இழந்து இருந்தால், இந்திய அணி விக்கெட் வீழ்ச்சியின் அழுத்தத்தில் சிக்கி இருக்கும்.
அடுத்து பேட்டிங் செய்ய இருந்த நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருந்தால், இந்திய அணியால் அந்த சூழ்நிலையில் 450 ரன்கள் என்ற இலக்கை தான் நிர்ணயம் செய்திருக்க முடியும். அதை எட்ட இங்கிலாந்து அணி நிச்சயம் முயற்சி செய்திருக்கும்.
ஆனால், இப்போது 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதால், இங்கிலாந்து அணி இப்போது டிரா செய்யப் போவதாக பேசி இருக்கிறது. மேலும், நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 72 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. நிச்சயம் அந்த அணி தற்போது அழுத்தத்தில் இருக்கிறது. இந்த அழுத்தத்திற்கு காரணம் 608 ரன்கள் என்று மிகப்பெரிய இலக்கு தான்.
அதை நிர்ணயம் செய்ய காரணமே இந்திய அணி வேகமாக ரன் சேர்த்ததுடன் விக்கெட் இழக்காமல் ஆடியதுதான். ஒரு புறம் விக்கெட் வீழ்ச்சி அடையாமல் ரவீந்திர ஜடேஜா பார்த்துக்கொண்டார். சீராகவும் ரன் சேர்த்தார். மறுபுறம் சுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். இந்த திட்டம் வெற்றி பெற்றதால் தான் இந்திய அணியால் மிகப்பெரிய இலக்கை நிர்ணயம் செய்ய முடிந்தது. எனவே, ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.