விசாகப்பட்டினம்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
1932ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 600 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. இதில் எண்ணற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் பெயர் சொல்லும் அளவிற்கான வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் கபில் தேவ், ஜவஹல் ஸ்ரீநாத், ஜாகீர் கான், ஆர்பி சிங் என்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா போல் நீண்ட பாரம்பரியம் கொண்ட வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு கிடையாது. ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் வரலாற்றை மாற்றியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 396 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே அதிரடியாக ரன்களை குவித்தது. அதிலும் பும்ரா வீசிய ஒரு ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி தள்ளினார் கிராலி. இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின் ஜோ ரூட் களத்திற்கு வந்த போது, மீண்டும் அட்டாக்கை தொடங்கினார் பும்ரா. இம்முறை இன்-ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர் என்று கண்கட்டி வித்தை காட்டினார் பும்ரா.
மிரண்டு போன ஜோ ரூட் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே ஓல்லி போப்பிற்கு அபாரமான இன்ஸ்விங்கர் யார்க்கரை சொருக, அந்த பந்து ஸ்டம்புகளை சிதறடித்தது. அவரை தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோவ் 25 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் பொறுப்பை பென் ஸ்டோக்ஸ் எடுத்து கொண்டார். இதையடுத்து அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் அட்டாக்கில் வந்தனர்.
ஆனால் அவர்களை எளிதாக பவுண்டரி, சிக்சர் அடித்து பென் ஸ்டோக்ஸ் வேகமாக ஆட்டத்தை மாற்ற முயற்சித்தார். ஆனால் பும்ரா மீண்டும் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். முதல் பந்தை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வீச, இரண்டாவது பந்தை கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் ஆஃப் ஸ்டம்பை நோக்கி வீசினார். பென் ஸ்டோக்ஸ் அதனை தடுக்க பேட்டை கீழ் இறக்கும் முன், பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. மிரண்டு போன பென் ஸ்டோக்ஸ், இப்படி பந்துவீசினால் எப்படி விளையாட முடியும் என்பது போல் பேட்டை கீழே போட்டு விரக்தியில் வெளியேறினார்.
பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல் இந்திய பவுலர்களில் குறைந்த பந்துகளை வீசி 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் உமேஷ் யாதவ் 7,661 பந்துகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. ஆனால் 150 விக்கெட்டுகளை வெறும் 6,781 பந்துகளிலேயே வீழ்த்தி சாதனையை முறியடித்துள்ளார். இந்திய அணியின் அஸ்வின் 150 விக்கெட்டுகளை வீழ்த்த 8,380 பந்துகளை எடுத்து கொண்டுள்ளார். இதன் மூலமாக ஜஸ்பிரித் பும்ரா ஒவ்வொரு 45.2 பந்துக்கும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.