விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், 2வது போட்டியில் சிறந்த கம்பேக்கை கொடுத்து இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்களை விளாசியது. அதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்களை விளாச, மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் இணைந்து 187 ரன்களை மட்டுமே சேர்த்தனர். ஆனால் பவுலிங்கின் போது இந்திய அணியின் துணை கேப்டனான பும்ரா இங்கிலாந்து மிடில் ஆர்டரை மிரட்டிவிட்டார்.
ரூட், போப், பேர்ஸ்டோவ் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தியது ரசிகர்கள் மட்டுமல்லாமல் எதிரணி கூடாரத்தையே வியக்க வைத்தது. 15.5 ஓவர்கள் வீசிய பும்ரா 45 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 104 ரன்களை விளாசினார்.

இவரின் சதம் காரணமாகவே இந்திய அணியால் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. இதன்பின் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியிடம் இருந்து ஆட்டம் கைகளை விட்டு சென்ற போது, உணவு இடைவேளைக்கு முன் இழுத்து பிடித்தார் பும்ரா. பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்திய அவர், தொடர்ந்து அதிரடியாக ரன்கள் குவித்த பென் ஃபோக்ஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இதன் மூலமாக 2வது இன்னிங்ஸில் பும்ரா 46 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் என்று மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் பும்ரா. வேகப்பந்துவீச்சிற்கு சாதகமில்லாத பிட்சில் கூட அசத்தல் பவுலிங் செய்து பும்ரா இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.