லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பாரம்பரியமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
லண்டனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பார்ப்பதற்கு பல பிரபலங்களும் வருவது வழக்கம். இந்த சூழலில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ஜித்தேஷ் சர்மா பல போட்டிகளில் அந்த அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.

இதனால் ஜித்தேஷ் சர்மாவுக்கு பல ரசிகர்கள் பட்டாளம் உருவானார்கள். அது மட்டும் இல்லாமல் ஜித்தேஷ் சர்மா இந்திய அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். ஆர்சிபி அணியில் மென்டராக தினேஷ் கார்த்திக் செயல்பட்ட நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவர் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தார்.
இந்த நிலையில் தமது அணி வீரரான ஜித்தேஷ் சர்மாவை தினேஷ் கார்த்திக் லார்ட்ஸ் மைதானத்திற்கு வர சொல்லி இருக்கின்றார். இதனை அடுத்து ஜிதேஷ் போட்டியை பார்க்க வந்தது மட்டுமல்லாமல் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இருக்கும் இடத்தை பார்க்க காத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் ஜித்தேஷ் சர்மாவை உள்ளே விடாமல் தடுத்து இருக்கிறார்கள். இதை அடுத்து பலரும் இவர் கிரிக்கெட் வீரர் என்றும் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். இவரை அனுமதியுங்கள் என்றும் கூறியிருக்கின்றனர்.
அப்போது தினேஷ் கார்த்திக் அந்த வழியாக வந்ததும் ஜித்தேஷ் சர்மா தினேஷ் கார்த்திக்கை அழைத்திருக்கிறார். ஆனால் அப்போது தினேஷ் கார்த்திக் அவரை கண்டுகொள்ளாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜித்தேஷ் சர்மா கடும் கோபத்தில் அங்கு நின்று கொண்டு திட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது.
எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள தினேஷ் கார்த்திக், சமூக வலைத்தளத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சினையை தான் இன்று நான் சந்தித்திருக்கின்றேன். நான் தான் ஜித்தேஷ் சர்மாவை கிரிக்கெட் வர்ணனை செய்யும் இடத்திற்கு அழைத்தேன். அவரும் வந்திருந்தார். நான் அவரை கீழே வந்து இறங்கி பார்த்து, அவரை நான் கிரிக்கெட் வர்ணனை செய்யும் இடத்திற்கு அழைத்து சென்றேன். அவரும் அங்கு இருந்த வீரர்கள் எல்லாம் சந்தித்து விட்டு புறப்பட்டார். ஆனால் வீடியோவில் இடம் பெற்று இருக்கும் இடம் மைதானத்திற்கு வெளியே கிடையாது. அது நாங்கள் இருக்கும் இடத்திற்கு கீழே உள்ளது தான் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.