மும்பை : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி வரும் புதன்கிழமை கொல்கத்தா நகரில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வரும் நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் செய்தியாளர்களை சந்தித்து தங்களது அணி குறித்து பேசி இருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம்." எங்கள் அணியின் பேட்டிங் மிகவும் பலமாக இருக்கிறது. 11 வீரர்களுக்குமே பேட்டிங் நன்றாகத் தெரியும்.

எனவே எங்கள் அணி வீரர்கள் அதிரடியாக ஆக்ரோஷமாக விளையாடி ரன்களை சேர்ப்பார்கள். இதனால் நாங்கள் விக்கெட் விழுவது குறித்து கவலைப்படுவதில்லை. ஏனென்றால் வேலையை செய்து முடிக்க கூடிய வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். எங்கள் அணியில் இருக்கும் பவுலர்களுக்கு பேட்டிங்கும் நன்றாக தெரியும். கெஸ் ஆட்கின்ஸனை எடுத்துக் கொண்டால் அவர் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்திருக்கிறார்.
இதேபோன்று பிரைடல் கர்ஸ் அதிரடியாக விளையாட கூடியவர். ஆதில் ரசித் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் நிறைய சதம் அடித்திருக்கிறார். எனவே இப்படிப்பட்ட பேட்டிங் தெரிந்த பவுலர்கள் கிடைத்ததை நினைத்து நான் பெருமை கொள்கின்றேன். இன்னும் எங்கள் அணியில் ஜேக்கப் போத்தல் போன்ற வீரர்கள் முதன்முறையாக இந்தியாவுக்கு வருகிறார்கள்.
இது அவர்களுக்கு நல்ல சவாலாக இருக்கும். மெக்குல்லம் உடன் ஒரு நாள் டி20 போட்டிகளில் இணைந்து பணியாற்றுவதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. மெக்குல்லம் எதிர்பார்க்கக் கூடிய விஷயங்களை செய்து முடிக்கும் வீரர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். மெக்குல்லத்துடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இந்த அணியில் உள்ளனர்.
எனவே இந்த போட்டிகளை நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருக்கிறோம் என்று ஜாஸ் பட்லர் கூறினார். இதேபோன்று இந்திய அணி வீரர்கள் குடும்பங்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு செல்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஜாஸ் பட்லர் தற்போது உள்ள நவீன வாழ்க்கையில் குடும்பம் என்பது மிகவும் முக்கியம்.
சுற்றுப்பயணத்தின் போது குடும்பத்தினர் அருகில் இருந்தால் வீரர்களும் நன்றாக விளையாடுவார்கள். கோவிட் தொற்றுக்குப் பிறகு குடும்பத்தினரை பிரிந்து நாங்கள் அதிக நேரம் செலவிடுகின்றோம். எனவே குடும்பம் கிரிக்கெட்டை பாதிக்கிறது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று ஜாஸ் பட்லர் கூறினார்.