மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்கவீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றார்கள். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முயற்சியுடன் இந்திய அணி இந்த டெஸ்டில் விளையாடுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ்,இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியின் விக்கெட்டை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். எப்போதும் இந்திய அணி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டு மதிய உணவு நேர இடைவெளிக்கு முன்பு இரண்டு விக்கெட்டுகளை இழந்து விடும். அல்லது ஒரு விக்கெட்டையாவது இழந்துவிடும்.
இதுதான் இந்த தொடரில் வாடிக்கையாக இருந்தது. ஆனால் மான்செஸ்டர் டெஸ்டில் விக்கெட்டுகளை இழக்காமல் இந்திய வீரர்கள் விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராகுல் 98 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அதே போன்று ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய எட்டாவது சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார்.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக அதிக அரை சதம் அடித்த இந்திய தொடக்க வீரர் பட்டியலில் தற்போது கே எல் ராகுலை முந்தி ரோகித் சர்மாவின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். முதல் டெஸ்டில் சதம் இரண்டாவது மற்றும் நான்காவது டெஸ்டில் அரைசதம் என ஜெய்ஸ்வால் பட்டையை கிளப்பி வருகிறார்.
இந்த தருணத்தில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விட்டுக் கொடுத்திருக்கின்றார்.எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து வீரர் லியாம் டாசனின் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஸ்லிப் கேட்ச் ஆனார். இதன் மூலம் 2924 நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்து வீரர் டாசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார்.