IND vs ENG: கேஎல் ராகுல் அபார சதம்.. கவாஸ்கர், டிராவிட் சாதனை முறியடிப்பு
லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் அபாரமாக விளையாடி சதம் அடித்திருக்கிறார்.இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் தொடக்க வீரராக ராகுல் மூன்றாவது சதத்தை அடித்து கவாஸ்கர் சாதனையை முறியடித்து இருக்கின்றார்.
லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ராகுல் 42 ரன்கள் எடுத்த நிலையில் தவறான ஒரு ஷாட் ஆடி ஆட்டம் இழந்தார். அதற்கு ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்தனர். ஆப்சைடுக்கு வெளியே செல்லும் பந்தை விராட் கோலி போல் அடித்து ஆட்டம் இழந்து விட்டார்.

இதனால் பலரும் அவரை குறை கூறினர். இந்த நிலையில் 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இதில் 90 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அப்போது 47 ரன்கள் உடன் களத்தில் இருந்த ராகுல் இன்று இன்னிங்சை தொடங்கினார்.
வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். கில் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். எனினும் ராகுல் தொடர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். ராகுல் நங்கூரம் போல் களத்தில் நின்று விளையாட, அவருடைய விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர்.
மறுபுறம் பண்ட் அதிரடி காட்டி ரன்களை சேர்த்தார். இந்த ஜோடி 150 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்கள். இந்த சூழலில் கே எல் ராகுல் 22 பந்துகளை எதிர்கொண்டு தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் ஆசியாவை சேர்ந்த தொடக்க வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மண்ணில் மூன்று சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு கவாஸ்கர், ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி ஆகியோர் இங்கிலாந்து மண்ணில் இரண்டு சதம் அடித்து இருந்த நிலையில் ராகுல் தற்போது மூன்று சதம் அடித்துள்ளார். இன்னும் சொல்லப் போனால் 2018 ஆம் ஆண்டிலிருந்து கணக்கில் எடுத்துக்கொண்டால் இங்கிலாந்து தொடக்க வீரர்களை விட ராகுல்தான் இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் அடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications