மும்பை: இந்திய அணியின் முக்கிய வீரரான கே எல் ராகுல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் ஓய்வு வேண்டும் என பிசிசிஐ - இடம் கேட்டு இருந்தார். அதனால் அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்படும் எனவும், அவர் நேரடியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கே எல் ராகுலின் வேண்டுகோளை பிசிசிஐ மறுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. ராகுலை இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் பங்கேற்றார்.

அந்த தொடரின் முதல் மூன்று போட்டியில் அவர் ஓரளவு ரன் சேர்த்தார். கடைசி இரண்டு போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் நீண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியதால் அவர் இந்தியா வந்தவுடன் ஓய்வில் இருந்தார். பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் அவர் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது கே எல் ராகுலுக்கு ஓய்வு அளிக்கக் வேண்டாம் என முடிவு செய்து இருக்கிறது பிசிசிஐ. ராகுல் நிச்சயமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கே எல் ராகுல் விடுப்பு எடுத்துக் கொள்ள நினைத்தால், அவர் நிச்சயமாக 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெற மாட்டார் எனவும் கூறப்படுகிறது.
அதே போல ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்ற மற்ற மூத்த வீரர்களுக்கும் ஓய்வு கிடையாது. இந்த தகவல் முன்பே வெளியாகி இருந்தது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளனர்.
வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மட்டுமே இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படும். அவர் தற்போது காயத்தில் இருப்பதால் அது குறித்து மருத்துவ ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அவரால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியுமா? என பிசிசிஐ மருத்துவர்களுடன் ஆலோசித்து வருகிறது.