தரம்சாலா : சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜாக் கிராலி 79 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

99 ரன்களுக்கு ஒரு விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 119 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் குல்தீப் யாதவ் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். குல்தீப் யாதவ் கைகளில் இருந்து பந்து வெளி வருவதை கணிக்காமல் பிட்சான பின் பந்தை கணிக்க முடியாமல் ஆட்டமிழந்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு இதே தரம்சாலா மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் இந்திய அணிக்காக குல்தீப் யாதவ் அறிமுகமானார். தற்போது தரம்சாலா மைதானத்தில் களமிறங்கிய 2வது போட்டியில் குல்தீப் யாதவ் வேறு மாதிரியான மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 50வது விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ் மொத்தமாக 51 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் குறைந்த பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் 2,205 பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இதனை குல்தீப் யாதவ் 1,871 பந்துகளிலேயே சாதித்துள்ளார். இந்த பட்டியலில் பும்ரா 2,520 பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.