மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அட்டாக்கிங் பாணியிலான கிரிக்கெட்டை தான் விளையாடுவேன் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பின் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், இந்த போட்டியில் விளையாடினார். இந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மட்டுமே பேட்டிங் செய்ய ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த இன்னிங்ஸிலும் 7 பவுண்டரிகள் உட்பட 48 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கிய போது ஆந்திர அணி பவுலர்கள் ஷார்ட் பால்களை வீசி அட்டாக் செய்தனர். ஆனால் அவை போதிய வேகத்தில் வீசப்படாததால், ஸ்ரேயாஸ் ஐயர் எளிதாக பவுண்டரியாக மாற்றி ரன்களை சேர்த்தார். இதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், ஆட்டத்தின் எந்த சூழலாக இருந்தாலும் எனது அணுகுமுறை அட்டாக் செய்வது தான். ஒருவேளை டிஃபென்சிவாக ஆட வேண்டிய நிலையில் இருந்தாலும், அணியை வழிநடத்தி ரன்கள் சேர்ப்பது தான் இலக்கு. அதுதான் எனது மனநிலை. எப்போதும் அதனை மாற்றி கொள்ள மாட்டேன். இந்த போட்டியில் ஆந்திர அணி பவுலர்கள் கொஞ்சம் பாதுகாப்பாக பவுலிங் செய்தனர்.
எனது பலம் என்னவென்பதை அறிந்து பவுலிங் செய்தார்கள். அவர்கள் ஷார்ட் பால்கள் வீசிய போது, அதனை பவுண்டரிகளாக மாற்றினேன். அவர்களின் ஷார்ட் பால் அணுகுமுறையை எனது அதிரடி பேட்டிங் மூலமாக எதிர்கொண்டேன். பந்துகளை எதிர்கொள்ளாமல் விக்கெட் கீப்பரிடம் விட்டு விளையாடுவது எனது சலிப்பை கொடுக்கும். அதனால் எந்த சூழலிலும் அட்டாகிங் பாணி தான் எனது ஆட்டம் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் நம்பர் 5 வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்து வருகிறார். அந்த இடத்தில் அட்டாக்கிங் பாணியில் ஆடுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய சோதனையாக அமைய வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ஸ்பின்னர்களை விளாசினாலும், வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் ஸ்ரேயாஸ் ஐயர் திணறி வருகிறார். இதனால் அவரின் அட்டாக்கிங் பாணியிலான ஆட்டம் சரிவருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுக்கும் போது ஸ்ரேயாஸ் ஐயர் தனது இடத்தை இழப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.