லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை பாரம்பரியமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் இந்திய அணி பேட்ஸ்மேன்களும் அதிக அளவு ரன்கள் குவித்தார்கள்.
இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஷிட்டான்சு கோட்டாக், "ஆடுகளம் தற்போது புற்களில் நிறைந்து இருக்கின்றது. நாளை இந்த புற்கள் நீக்கப்படும் என்று நினைக்கின்றேன். அப்போதுதான் ஆடுகளம் எப்படி இருக்கின்றது என்று தெரிய வரும்."
"வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்று நினைக்கின்றேன். எனவே மனதளவில் பேட்ஸ்மேன்கள் நல்ல உத்வேகத்துடன் இருந்தால் இந்த ஆடுகளத்தில் ரன்கள் சேர்க்க முடியும் என்ற நினைக்கின்றேன். எங்கள் அணி பேட்ஸ்மேன்கள் திறமை வாய்ந்தவர்கள். எந்த கஷ்டமும் இன்றி பவுலர்களை அடிக்க கூடியவர்கள்."
"இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவித்ததற்கான பாராட்டை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அது அவர்களுடைய உழைப்பு. ஆனால் இந்த ஆடுகளம் நிச்சயம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். எனினும் இது குறித்து நாங்கள் பெரிய அளவில் யோசிக்கவில்லை. இதேபோன்று எங்கள் பவுலர்களும் ஆடுகளத்தை நன்றாக பயன்படுத்துகிறார்கள்."
"பந்தை நன்றாக வீசுகிறார்கள். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ஒன்றும் இந்தியாவில் இருக்கும் ஆடுகளங்கள் போல் எல்லாம் அமைக்கப்படவில்லை. எங்கள் பவுலர்களுக்கும் ஆடுகளம் சாதகமாக தான் இருக்கும். இதேபோன்று பவுலர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது என்பது பும்ராவுக்கு மட்டும் கிடையாது. எங்கள் அணியில் உள்ள மற்ற பவுலர்களுக்கும் சேர்த்து தான். ஆனால் ஒவ்வொரு பவுலர்களின் உடல் தகுதியும் வித்தியாசமாக இருக்கும்."
"எனவே அனைவரின் உடல் தகுதியும் ஒரே மாதிரி இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதே சமயம் தங்களுக்கு ஓய்வு வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து பவுலர்களுக்கு தான் தெரியும். ஏனென்றால் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான நேரம் என்பது மிகவும் குறுகிய காலமாக இருக்கின்றது" என்று பேட்டிங் பயிற்சியாளர் ஷிட்டான்சூ கோட்டாக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே 2020 ஆம் ஆண்டில் இருந்து கணக்கிட்டால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 1030 ஓவர்களை வீசி 148 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றார். இரண்டாவது இடத்தில் சிராஜ் 956 ஓவர்களை வீசி 109 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கின்றார். இதன் பிறகு சமி 485 ஓவர்கள் தான் வீசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.