லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐசிசி சதி செய்கிறதா என முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடும் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கின்றார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய லண்டன் லார்ட்ஸ் மைதான டெஸ்ட் போட்டியில் குறைந்த ஓவர்கள்தான் வீசப்பட்டது. ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும்.
ஆனால் இது அணிகளும் குறைவாகத்தான் ஓவர்களை வீசி இருந்தார்கள். இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசர் உசேனும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் வீசப்படுவதை நடுவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி வீரர்கள் தாமதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக மூன்றாவது நாள் இறுதியில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஓவர்களை எதிர்கொள்ள தாமதப்படுத்தியதாக இந்திய அணி வீரர்கள் குற்றம் சாட்டி மோதலில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்தப் போட்டி ஐந்து நாள் முடிவடைவதற்குள்ளே மூன்றாவது செஷனில் போட்டி முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் ஓவர்களை தாமதப்படுத்தியதாகக் கூறி இங்கிலாந்து அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 10% அபராதமும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இங்கிலாந்து வெற்றி சதவீத புள்ளிகள் ஐந்து அளவு குறைந்திருக்கிறது. இதன் மூலம் இரண்டாவது இடத்திலிருந்த இங்கிலாந்து அணி தற்போது மூன்றாவது இடத்திற்கு சரிந்திருக்கிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், நான் நேர்மையாக ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகின்றேன்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளுமேதான் ஓவர்களைக் குறைவாக வீசினார்கள். இந்த விஷயத்தில் இரண்டு அணிகளுமே தவறு செய்தது. ஆனால் ஒரு அணிக்கு மட்டும் தற்போது அபராதம் விதிக்கப்பட்டிருப்பது என்னால் நம்பவே முடியவில்லை என்று மைக்கேல் வாகன் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி செயல்படுகிறது என்று மறைமுகமான குற்றச்சாட்டை அவர் வைத்திருக்கின்றார்.