IND vs ENG: முகமது ஷமியா இப்படி.. உறைந்து போன ரசிகர்கள்.. வலைப் பயிற்சியில் நடந்த சம்பவம்
கொல்கத்தா: முகமது ஷமி நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணிக்கு திரும்பி விட்ட நிலையில் முதல் நாள் பயிற்சியின் போது தனது இடது முழங்காலில் கட்டு கட்டிய நிலையில் பந்து வீசினார். அவர் தனது பழைய பவுலிங் திறனை வெளிப்படுத்த முடியாமல் சில மணி நேரம் திணறினார். மேலும் வலைப் பயிற்சி முடிந்து மைதானத்தை விட்டு வெளியே சென்ற போது அவர் இயல்பாக நடந்து செல்லவில்லை.
இந்த விஷயம் இந்திய ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு வேகப் பந்துவீச்சு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. பும்ரா வேகப் பந்துவீச்சின் தூணாக இருக்கும் நிலையில், முகமது ஷமியும் முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.

முகமது ஷமி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காயத்திலிருந்து மீண்டு வந்து கொண்டு இருந்ததால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இருக்கிறார். அதற்கு முன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பயிற்சி பெறும் வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஒரு நாள் தொடரிலும் அவர் பங்கேற்க இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி ஜனவரி 22 அன்று தொடங்க உள்ளது. அதற்கு முன் இந்திய அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது முகமது ஷமி முதல் முறையாக இந்திய அணியுடன் இணைந்து பந்து வீசி பயிற்சி செய்தார்.
வலை பயிற்சியில் அவர் முதலில் எடுத்தவுடன் அதிவேகத்தில் ஓடி வந்து வீசவில்லை. அவரது இடது முழங்காலில் அடிக்கடி வீக்கம் ஏற்படும் ஏற்படுவதால் அதை பிஸியோதெரபிஸ்ட் அறிவுரையின்படி துணி வைத்து கட்டி இருந்தார். மேலும். நிதானமாகவே ஓடிவந்து பவுலிங் செய்தார். இடையே அவரது பவுலிங் வேகம் சற்று அதிகரித்த போதும் துருவ் ஜுரல், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் ஷமியின் பவுலிங்கில் எளிதாக ஷாட்களை அடித்தனர்.
பின்னர் சில நிமிடங்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் முகமது ஷமி பவுலிங் செய்தார். அப்போது தனது முந்தைய வேகத்தை அவர் மீட்டு எடுத்தார். அவர் வீசிய பந்துகளில் திலக் வர்மா சில முறை ஆட்டம் இழந்தார். இது மட்டுமே முகமது ஷமியின் முதல் நாள் வலைப் பயிற்சியில் நல்ல விஷயமாக அமைந்தது.
அதன் பின் வலைப் பயிற்சி முடிந்து அவர் வெளியேறிய போது இயல்பாக நடந்து செல்லவில்லை. அவரது இடது முழங்காலை அவர் அதிகமாக ஊன்றவில்லை. இது ரசிகர்களை கவலை கொள்ள செய்து இருக்கிறது. அவரால் இங்கிலாந்து டி20 தொடரில் எந்த காயமும் இன்றி முழு வீச்சில் பந்து வீச முடியுமா? அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை அவரால் தாக்கு பிடிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications