ராஞ்சி : இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் பென் ஃபோக்ஸ் இருவரும் 113 ரன்கள் பார்னர்ஷிப் சேர்த்த நிலையில், இந்திய அணியின் சிராஜ் தரமான கம்பேக்கை கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணிக்கு முதல் செஷனிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அறிமுக வீரர் ஆகாஷ் தீப் வீசிய ஸ்பெல்லில் டக்கெட் 11, போப் 0, கிராலி 42 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோவ் 38 ரன்களும், கேப்டன் ஸ்டோக்ஸ் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் முதல் செஷன் முடிவில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. உணவு இடைவேளைக்கு பின் ஜோ ரூட் - பென் ஃபோக்ஸ் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் பேஸ் பாலை மறந்துவிட்டு, சூழலுக்கு தகுந்தபடி நிதானமாக விளையாடினார்கள். இதனால் சிறப்பாக ஆடிய ஜோ ரூட் இந்த டெஸ்ட் தொடரில் முதல் அரைசதத்த பதிவு செய்தார். இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 200 ரன்களை எட்டியது. 2வது செஷனில் ஒரு விக்கெட்டை கூட கொடுக்காமல் இருவரும் 86 ரன்கள் சேர்த்தனர்.
பேஸ் பால் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு ஜோ ரூட் தரமான இன்னிங்ஸை ஆடினார். பின்னர் தேநீர் இடைவேளைக்கு பின் பென் ஃபோக்ஸ் அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் 16 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் பென் ஃபோக்ஸ் திட்டத்தை அறிந்த ரோகித் சர்மா உடனடியாக சிராஜ் கையில் பந்தை கொடுத்து அட்டாக் செய்தார். அந்த ஓவரின் 4வது பந்திலேயே பவுண்டரி அடிக்கும் முயற்சிக்கும் ஃபோக்ஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் மூலம் ஃபோக்ஸ் - ரூட் இடையிலான 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் முறிந்தது. தொடர்ந்து வந்த டாம் ஹார்ட்லி சிராஜ் வேகத்தில் போல்டாகி 13 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் இந்திய அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார் சிராஜ். பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால், சிராஜிற்கான பொறுப்பு அதிகரித்தது. அதனை சரியாக செய்து முடித்துள்ளார். இதனால் பலரும் சிராஜிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.