IND vs ENG: இதெல்லாம் தேவையா? வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய சிராஜ்.. வெளுத்து வாங்கிய ஹாரி புரூக்
லீட்ஸ்: இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை வம்பிழுத்து வாங்கிக் கட்டிக்கொண்டார் முகமது சிராஜ். இந்தச் சம்பவம் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 471 ரன்கள் எடுத்தது. அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வந்தது. அந்த அணியைச் சேர்ந்த ஒலி போப் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து இருந்தாலும், அடுத்து ஹாரி புரூக் அதிரடியாக ரன் சேர்த்து வந்தார்.
அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். அதே சமயம் ஹாரி புரூக் அதிரடியாகவும் ஆடினார். 84ஆவது ஓவரில் முகமது சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார் ஹாரி புரூக். அப்போது முகமது சிராஜ் ஒரு இன்ஸ்விங்கரை வீசினார். ஹாரி புரூக்கால் அந்த பந்தை சரியாக அடிக்க முடியவில்லை. அதன் பிறகு புரூக் அருகே சென்ற முகமது சிராஜ் அவரை சீண்டும் வகையில் பேசினார். ஆனால் ஹாரி புரூக் அதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை.

அமைதியாக இருந்த புரூக், அதற்கு அடுத்த ஓவரில் சிராஜ் பந்து வீசியபோது 18 ரன்கள் சேர்த்து, ஒரு சிக்ஸ் மற்றும் சில பவுண்டரிகளை அடித்து மிரட்டினார். இதை அடுத்து முகமது சிராஜ் வாயைக் கொடுத்து வாங்கிக்கொண்டதாக இங்கிலாந்து விமர்சகர்கள் கூறினர். இங்கிலாந்து ஊடகங்களிலும் இந்த விவகாரம் பற்றி ஹாரி புரூக் பதிலடி கொடுத்ததாக எழுதப்பட்டு இருக்கிறது.
முகமது சிராஜ் இதற்கு முன் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போதும் இதே போல ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். அப்போது அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். மேலும் 27 ஓவர்களில் 122 ரன்களை வாரி இறைத்திருந்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 4.5 ரன்கள் விட்டுக்கொடுத்து இருந்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணியால் முதல் இன்னிங்ஸில் வெறும் 6 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 90 ரன்கள் எடுத்து 2 விக்கெட்களை இழந்து இருக்கிறது. இந்திய அணி இன்னும் 300 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications