பிர்மிங்காம்: இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், சகவீரர் வாஷிங்டன் சுந்தரை மோசமான கெட்ட வார்த்தையில் திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தின் போது இந்தச் சம்பவம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 608 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயம் செய்திருந்தது. நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 72 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இந்த நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. எப்போதும் நாளின் துவக்கத்தில் முகமது சிராஜ் தான் பந்து வீசுவார்.

ஆனால், இந்த முறை அதில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆகாஷ் தீப் முதலில் பந்து வீசினர். இருவரும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசினார்கள். ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பிறகு நீண்ட நேரத்திற்குப் பிறகு முகமது சிராஜுக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதும் அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. அதனால் அவர் வெறுப்படைந்திருந்தார். அந்த நேரத்தில், இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித் அடித்த பந்து கவர் திசையில் நின்றிருந்த வாஷிங்டன் சுந்தரைத் தாண்டிச் சென்றது. அந்தப் பந்தைப் பிடிக்க முயன்ற வாஷிங்டன் சுந்தர் தவற விட்டிருந்தார். அதைப் பயன்படுத்தி பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் ஒரு ரன் எடுத்தார்கள்.
இதனால் கோபமடைந்த முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தரைப் பார்த்து இந்தியில் பயன்படுத்தப்படும் ஒரு மோசமான வார்த்தையைச் சொன்னார். மேலும் கோபமாக தனது முகபாவனைகளையும் காட்டினார். இதை ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.
முகமது சிராஜ் போட்டிகளின் போது மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறார். எதிரணிக்கு பயம் ஏற்படுத்துவதற்காக அவர் அவ்வாறு இருக்கலாம். ஆனால், சகவீரர்களிடமும் அவர் மிகவும் கோபமாகவே நடந்துகொள்கிறார் என்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்ற வெறுப்பு இருக்கலாம். அதை சக வீரர்கள் மீது வெளிப்படுத்தக் கூடாது.
இந்தப் போட்டியில் சிராஜ் முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்திய போதும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஆகாஷ் தீப் சிறப்பாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.