லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, இங்கிலாந்து அணியின் ஆட்டத்தை அந்நாட்டு முன்னாள் கேப்டன்களான நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஹாரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்து இங்கிலாந்தின் வெற்றிக்கு வலுவான அடித்தளமிட்டது.

ஒரு கட்டத்தில் 301 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இங்கிலாந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால், தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தலைகீழாக மாறியது. பின்னர் கடைசி நாளில் 34 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து கடைசி 4 விக்கெட்களை இழந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால், இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 367 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது குறித்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், "இங்கிலாந்து அணி பயந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பந்து ஸ்விங் ஆனபோது, அவர்கள் அதிக ரிஸ்க் எடுத்து அதிரடியாக ஆட முற்பட்டனர். அவர்களுக்குத் தேவையானது ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் மட்டுமே. ஆனால், அவர்கள் பதற்றத்தில் தாங்கள் வழக்கமாக ஆடும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்," என்றார்.
மற்றொரு முன்னாள் கேப்டனான நாசர் ஹுசைன், "ஒருவேளை இந்தத் தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் வென்றிருந்தால் அது மிகப்பெரிய அநியாயமாக இருந்திருக்கும். இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்திற்கு இந்த 2-2 என்ற சமமான முடிவு தகுதியானதுதான். சிராஜ் கடைசி விக்கெட்டை வீழ்த்தியது மிகவும் பொருத்தமாக இருந்தது," என்று தெரிவித்தார்.
இந்த வெற்றியின் மூலம், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்தத் தோல்வியானது, கடந்த 123 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் சந்திக்கும் மிகக் குறைந்த ரன் வித்தியாசத்திலான தோல்வியாகும். இதற்கு முன்பு 1902 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததே, மிகக் குறைந்த ரன் வித்தியாசத்திலான தோல்வியாக இருந்தது.