IND vs ENG: ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு.. 2 பேரும் உடனடியாக வாங்க.. பிசிசிஐ அழைப்பு
லண்டன்: இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, அவர் மேலும் சில வாரங்கள் ஓய்வெடுக்க பிசிசிஐ மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிஷ் ரெட்டி இன்னும் தனது உடற்தகுதி மீட்கும் பயிற்சியை முழுமையாகத் தொடங்கவில்லை.
முன்னதாக, இடது தொடைப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்தும் அவர் விலகியிருந்தார். தர்மசாலாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது பந்து வீசியபோது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது. இதனால் லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், சென்னையில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் மீண்டும் விளையாடினார்.

ஆனால், அந்தப் போட்டியில் 6 ஓவர்கள் வீசி 42 ரன்கள் கொடுத்த நிலையில் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. போட்டிக்குப் பிறகு மீண்டும் தொடைப் பகுதியில் அசௌகரியம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். நிதிஷ் ரெட்டி தற்போது பெங்களூரில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு செயல்பாட்டு மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் முழு உடற்தகுதியை எட்ட குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக, இங்கிலாந்து தொடரில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றாலும், அதன்பின்னர் நடைபெறும் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குள் அவர் முழு உடற்தகுதியை அடைவதை பிசிசிஐ இலக்காகக் கொண்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் வெவ்வேறு பிரிவுகளாக அங்கு செல்லவுள்ளனர். கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் ஆகியோர் தங்களது பயிற்சிகளை முன்கூட்டியே தொடங்குவதற்காக முன்னதாகவே அங்கு செல்லவுள்ளனர். இதர வீரர்கள் ஜூலை 12 ஆம் தேதிக்குள் அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி பர்மிங்காமில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கால் காயம் காரணமாக விலகியிருக்கும் நிலையில், தற்போது நிதிஷ் குமார் ரெட்டியும் காயமடைந்திருப்பது இந்திய அணிக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

