லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெயில் நன்றாக இருந்ததால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பார்கள் என இந்திய ரசிகர்கள் பயந்தனர். இந்த தருணத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பும்ரா,ஆகாஷ் தீப் மற்றும் சிராஜ் ஆகியோர் பந்துகளை வீசினர்.

இதில் பும்ரா வழக்கம்போல் கட்டுக்கோப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். ஆகாஷ் தீப் பந்து வீசியபோது சில கேட்ச் வாய்ப்புகள் ஏற்பட்டாலும், அது விக்கெட்டாக மாறவில்லை. இதுபோன்று சிராஜுக்கும் அதிர்ஷ்டம் இல்லாததால் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவுக்கு முதல் விக்கெட் எங்கு இருந்து கிடைக்கப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அப்போது ஆட்டத்தில் 14வது ஓவரை இந்திய வீரர் நிதிஷ்குமார் ரெட்டி வீசினார். இதில் யாருமே எதிர்பாராத வகையில் நிதிஷ் குமார் ரெட்டி வீசிய பந்தை அடிக்க முற்பட்டபோது அது பண்டிடம் கேட்ச் ஆக மாறியது. இதனால் பென் டக்கட் 23 ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் சென்றார். அதேபோல் கடைசி பந்தில் மற்றொரு தொடக்க வீரரான சாக் கிராலி 18 ரன்கள் எடுத்திருந்தபோது நிதீஷ் குமாரின் அபார பந்துவீச்சில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 44 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபடும் என்று இந்திய ரசிகர்கள் பயந்த நிலையில் நிதீஷ் குமார் ரெட்டி நல்ல தொடக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.
இது குறித்து பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோனர்த்தனன் டிராட், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மிக வேகப்பந்து வீச்சு நன்றாக எடுக்கும். மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் போது பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படும் என்று கூறினார். இதனால் பும்ராவும் சிராஜும் தன்னுடைய பந்துவீச்சு வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.