லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் 6 ரன் வெற்றிக்கு சிராஜ்-இன் அனல் பறக்கும் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தாலும், அந்த சிறப்பான வெற்றிக்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். குறிப்பாக, இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 10வது விக்கெட்டுக்கு ஆடிய அதிரடி ஆட்டம், வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஒரு டெஸ்ட் போட்டியின் வெற்றி என்பது வெறும் 6 ரன்களில் தீர்மானிக்கப்படும்போது, அதில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும், ஒவ்வொரு ரன்னும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரியும். அந்த வகையில் 10வது விக்கெட்டுக்கு ஆடிய போது சரமாரியாக பவுண்டரி, சிக்ஸர் அடித்து 39 ரன்கள் சேர்த்த சுந்தரின் ஆட்டம் ஓவல் டெஸ்ட் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

இந்தப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் நின்றது வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரசித் கிருஷ்ணா. இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள், இந்திய பின்வரிசை ஆட்டத்தை விரைவில் முடித்துவிடலாம் என்று கணக்கு போட்டனர்.
ஆனால், சுந்தரின் திட்டம் வேறு மாதிரியாக இருந்தது. ஒரு பக்கம் பிரசித் கிருஷ்ணா ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை பாதுகாத்து நிற்க, மறுமுனையில் சுந்தர் தனது அதிரடியைக் காட்டினார். அதிரடியாக ஆடிய சுந்தர், 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார்.
குறிப்பாக அவர் அடித்த சிக்ஸர்கள், இங்கிலாந்து வீரர்களின் மன உறுதியைக் குலைத்தது. இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு முக்கியமான 39 ரன்களைச் சேர்த்தது. ஆச்சரியம் என்னவென்றால், இந்த 39 ரன்களையும் சுந்தர் மட்டுமே அடித்திருந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கான ஒரு புதிய சாதனையாகும்; ஒரு பேட்ஸ்மேன் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில், ஒரு பார்ட்னர்ஷிப்பில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
39 பந்துகளில் அரைசதம் கடந்த சுந்தர், 46 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் சேர்த்த இந்த ஒவ்வொரு ரன்னும், இறுதியில் இந்தியாவின் 6 ரன் வெற்றிக்கு முக்கியமானதாக மாறியது. ஒருவேளை, சுந்தர் இந்த அதிரடியைக் காட்டாமல் இருந்திருந்தால், போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும். நான்காம் நாள் அன்றே இங்கிலாந்து அணி போட்டியை வென்று இருக்கும்.
ஆனால், ஐந்தாம் நாள் அன்று 4 விக்கெட் கையில் இருக்க 34 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி பின்னர் 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஓவல் டெஸ்டில் மட்டுமல்ல, இந்தத் தொடர் முழுவதுமே வாஷிங்டன் சுந்தர் தனது ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அணிக்குத் தேவையான நேரத்தில் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
இந்த இங்கிலாந்து தொடரில், 4 போட்டிகளில் விளையாடிய சுந்தர், 8 இன்னிங்ஸ்களில் 284 ரன்கள் குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 47.33 ஆகும், இது ஒரு ஆல்ரவுண்டருக்கு மிகச் சிறந்த சராசரியாகும். இந்தத் தொடரில் மான்செஸ்டரில் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். மேலும், ஓவல் டெஸ்ட் அரைசதம் உட்பட மொத்தம் 4 அரைசதங்களை அடித்துள்ளார். பந்துவீச்சிலும் தனது முத்திரையைப் பதித்த சுந்தர், இந்தத் தொடரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
போட்டியை காப்பாற்ற நிதானமாக ஆடுவதாக இருந்தாலும் சரி, அணியின் ஸ்கோரை உயர்த்த பின்வரிசை வீரர்களுடன் சேர்ந்து அதிரடி காட்டுவதாக இருந்தாலும் சரி, இரண்டு விதமான ஆட்டங்களையும் வெளிப்படுத்தும் திறமையை சுந்தர் இந்தத் தொடரில் நிரூபித்துள்ளார். முன்னாள் இந்திய வீரர் வருண் ஆரோன் பாராட்டியது போல, "ஒரு வீரருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பும், நம்பிக்கையும் அளித்தால், இதுதான் விளைவாக இருக்கும்."
மொத்தத்தில், வாஷிங்டன் சுந்தரின் இந்த எழுச்சி, இந்திய டெஸ்ட் அணிக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம். இக்கட்டான சூழ்நிலைகளில் பேட்டிங்கிலும், தேவையான நேரங்களில் பந்துவீச்சிலும் கைகொடுக்கும் சுந்தர், இந்திய அணியின் நீண்ட கால நம்பிக்கையாக விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை.