IND vs ENG: 400 ரன்கள் குவித்த பிறகும் கில் பேட்டிங் மீது சந்தேகம்.. பார்த்தீவ் பட்டேல் தந்த பதிலடி
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில் மொத்தமாக 754 ரன்கள் அடித்திருந்தார். இதில் நான்கு சதம் அடங்கும். இந்த தொடரில் அதிகபட்சமாக கில் ஒரே இன்னிங்சில் 269 ரன்கள் குவித்தார்.
இதில் கில்லின் சராசரி 75 என்ற அளவில் இருந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டன், உலக அளவில் பிராட்மேனுக்கு பிறகு இரண்டாவது கேப்டன் போன்ற சாதனைகளை படைத்திருந்தார். இந்த தொடருக்கு முன்பு வரை ஆசியாவுக்கு வெளியே கில்லின் பேட்டிங் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது.

அவர் ஒரே ஒருமுறைதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் 2021 ஆம் ஆண்டு 91 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு பல நல்ல தொடக்கத்தை அவர் கொடுத்திருந்தாலும், 40 ரன்கள் தாண்டியதில்லை. இந்த நிலையில் கில் குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல், "இங்கிலாந்து தொடரில் அவர் நான்கு சதம் அடித்திருக்கின்றார்."
"அவருடைய சராசரி 75 என்ற அளவில் இருக்கின்றது. அவர் இந்த தொடரில் விதவிதமான கள சூழ்நிலையில் விளையாடினார். சில சமயங்களில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டது. அவர் மீது பல சந்தேகங்கள் இருந்தது. SENA நாடுகளில் அவரால் ரன் சேர்க்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. தற்போது அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்துள்ளார்."
"ஹெட்டிங்லி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 147 ரன்கள், எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 269 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் 161 ரன்களும் அவர் எடுத்திருந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால் அவருடைய பார்ம் குறித்து திரும்பவும் கேள்விகள் எழுந்தது."
"அவர் 430 ரன்கள் குவித்த நிலையிலும் அவருடைய பார்ம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பினார்கள். இதை அடுத்து மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து மீண்டும் அதற்கு பதில் அளித்தார். அந்த போட்டியில் இந்திய அணி டிரா செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்தது. அதிலும் சவால்களை அபாரமாக எதிர்கொண்டார். சிலர் கில் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பேட் மூலம் நல்ல பதில் தந்திருக்கின்றார்" என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் 692 ரன்கள் அடித்திருந்தார். தற்போது கில் அதனை முறியடித்து இருக்கின்றார். இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்களை பூர்த்தி செய்திருந்தார். இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கில் 2615 ரன்கள் அடித்துள்ளார். அவருடைய சராசரி 41 என்ற அளவில் இருக்கின்றது. இதில் ஒன்பது சதமும் 7 அரை சதமும் அடங்கும்.


Click it and Unblock the Notifications